Published : 25 Nov 2024 09:42 PM
Last Updated : 25 Nov 2024 09:42 PM
ஜெட்டா: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று 13 வயது ப்ளேயரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2-வது நாளாக திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை தங்களது அணிகளுக்காக வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டி போட்டுக்கொண்டனர். டெல்லி தனது ஏலத்தை தொடங்கியது. ராஜஸ்தான் ரூ.45 லட்சம் கேட்க, டெல்லி ரூ.50 லட்சம் கோரியது. இறுதிவரை சென்ற ஏலத்தில் ரூ.1.10 கோடி கோரிய ராஜஸ்தான் சூர்யவன்ஷியை தனது அணிக்குள் இழுத்துக் கொண்டது.
யார் இந்த சூர்யவன்ஷி? - 13 வயதான சூர்யவன்ஷி பிஹாரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். வெறும் 12 வயது 284 நாட்களில், 2023-24-ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக யுவராஜ் சிங் தனது 15 வயது 57 நாட்களிலும், சச்சின் 15 வயது 230 நாட்களிலும் அறிமுகமாகியிருந்தனர். தற்போது இவர்களை விட மிக குறைந்த வயதில் அறிமுகமாகி சாதித்துள்ளார் சூர்யவன்ஷி.
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரில் அவர் 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து மிரட்டினார். 13 வயது 188 நாட்களேயான அவர் சதமடித்து கவனம் ஈர்த்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்தவர் என்ற பெருமையை பெற்றார். 58 பந்துகளில் சதமடித்தார். இளம் வயதில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிக சிறிய வயதில் அறிமுகமாகி அனைவரின் பார்வையையும் தன் மீது குவித்துள்ளார் இந்த இளம் வயது சாதனையாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT