Last Updated : 29 Jun, 2018 03:16 PM

 

Published : 29 Jun 2018 03:16 PM
Last Updated : 29 Jun 2018 03:16 PM

‘திரும்பி வந்துடேன்னு சொல்லு’: கனடா டி20 போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி அரைசதம்

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கனடா டி20 போட்டியில் பங்கேற்று அதிரடியாக அரைசதம் அடித்தார்.

கனடா குளோபல் டி20 போட்டியில் டொரான்டோ நேஷனல் அணிக்காக விளையாடிய ஸ்மித் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் மீண்டும் அதே ஃபார்மில் இருப்பதை வெளிப்படுத்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய வாரியம் விதித்தது. உள்நாட்டில் கீழ்நிலையில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்துக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் 2 மாதங்களாக ஒதுங்கி இருந்த ஸ்மித், வார்னர், கனடாவில் நடந்துவரும் குளோபல் டி20 போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

கனடாவில் குளோபல் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் டொரான்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டன்டேரன் சாமி, வின்னிபெக் அணிக்கு டிவைன் பிராவோ கேப்டனாகவும், மான்ட்ரியல் அணிக்கு இலங்கை வீரர் மலிங்கா கேப்டனாகவும், எட்மான்டன் அணிக்கு ஷாகித் அப்ரிடி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று கிங்க் சிட்டி நகரில் நடந்த போட்டியில் டொரான்டோ நேஷனல்ஸ் அணியும், வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த வான்கூவர் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் வீரர் லூயிஸ் 55 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஆந்த்ரே ரஸல் 54 ரன்கள் குவித்தார்.

228ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய டொரான்டோ அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டொரான்டா அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த போட்டியில் ஸ்மித் 41 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். பவாத் அகமது பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தார்.

டொரான்டோ அணியின் கேப்டன் டேரன் சாமி 22 ரன்களிலும், நியூசிலாந்து வீரர் ஆன்டன் டேவ்சிக் 92 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டிக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் இப்போது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். வேறு எந்த சிந்தனையும் இல்லை. டொராண்டோ நேஷனல் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். என்னுடன் அனைவரும் நன்றாகப் பழகுகிறார்கள்.

என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான காலத்தில் இப்போது இருக்கிறேன். அதைக் கடந்து வர வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னுடைய நோக்கம் எல்லாம் கிரிக்கெட்டை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் மட்டும்தான் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x