Published : 24 Nov 2024 03:24 AM
Last Updated : 24 Nov 2024 03:24 AM

சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்: 204 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 1,574 பேர்

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் இன்றும் (24-ம் தேதி), நாளையும் (25-ம் தேதி) சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் காணலாம். இந்த ஏலத்துக்காக 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் 48 பேரும், வெளிநாட்டு வீரர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய 193 பேரும், உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 3 பேரும், இந்திய அணிக்காக அறிமுகம் ஆகாத 318 பேரும், வெளிநாட்டு வீரர்களில் சர்வதேச போட்டியில் களம் காணாத 12 பேரும் அடங்குவார்கள். இந்திய நட்சத்திர வீரர்கள் அனைவரது அடிப்படை விலையும் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

204 வீரர்களே தேவை: முன்னதாக மெகா ஏலத்தையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் 10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைத்தனர். ஒவ்வொரு அணியும் 25 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் மொத்தம் 250 வீரர்கள் இடம் பெறுவார்கள். ஏற்கெனவே 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளதால் இன்று முதல் இரு நாட்கள் நடைபெறும் மெகா ஏலத்தில் 204 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவார்கள்.

அணிகள் வைத்துள்ள தொகை: ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக ரூ.120 கோடி செலவு செய்யலாம். இதில் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டன. இந்த வகையில் தற்போது கொல்கத்தா அணியிடம் கைவசம் ரூ.51 கோடி உள்ளது. மும்பை அணி ரூ.45 கோடியையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.45 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.41 கோடியையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.69 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.55 கோடியையும் மீதம் வைத்துள்ளன.

அதேவேளையில் பஞ்சாப் கிங்ஸ் ரூ.110.5 கோடியையும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.83 கோடியையும், டெல்லி கேபிடல்ஸ் ரூ.73 கோடியையும், குஜராத் டைட்டன்ஸ் ரூ.69 கோடியையும் கையிருப்பு வைத்துள்ளன.

ஏலப்பட்டியலில் 12 பேர் நட்சத்திர வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் முதல் பட்டியலில் ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (இந்தியா), காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களது அடிப்படை தொகை ரூ.2 கோடியாக உள்ளது. இதில் ரிஷப் பந்த்தை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், ரூ.25 கோடிக்கு மேல் வாங்கப்பட்டலாம் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் பஞ்சாப் அணி மட்டுமே அதிக தொகையை (110.5 கோடி) வைத்துள்ளது. இதனால் அந்த அணி ரிஷப் பந்த்தை வளைத்து போடுவதில் தீவிரம் காட்டக்கூடும்.

2-வது பட்டியலில் யுவேந்திர சாஹல் (இந்தியா), லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா), கே.எல்.ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ் (இந்தியா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் டேவிட் மில்லரின் அடிப்படை தொகை ரூ.1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 வீரர்களுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக உள்ளது.

யாருக்கு எந்த தொகை? ஏலத்துக்காக பதிவு செய்துள்ள வீரர்களில் 81 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடியில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடியில் 18 பேரும், ரூ.1 கோடியில் 23 பேரும், ரூ.75 லட்சத்தில் 92 பேரும், ரூ.50 லட்சத்தில் 8 பேரும், ரூ.40 லட்சத்தில் 5 பேரும், ரூ.30 லட்சத்தில் 320 பேரும் உள்ளனர்.

25 தமிழக வீரர்கள்: ஐபிஎல் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்கள் விவரம்: அஸ்வின், நடராஜன், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், நாராயன் ஜெகதீசன், பாபா இந்திரஜித், மணிமாறன் சித்தார்த், சஞ்சய் யாதவ், சோனு யாதவ், ஜாதவேத் சுப்பிரமணியன், ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்ஜன் பால், அஜிதேஷ் குருசாமி, ரித்திக் ஈஸ்வரன், முகமது கான், துஷார் ரஹேஜா, ஜாபர் ஜமால், முகமது அலி, லக்சய் ஜெயின், பி.விக்னேஷ், ஷிவம் சிங், குர்ஜப்னீத் சிங், சந்தீப் வாரியர், முருகன் அஸ்வின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x