Published : 22 Nov 2024 04:01 PM
Last Updated : 22 Nov 2024 04:01 PM

IND vs AUS முதல் டெஸ்ட் | திருப்பிக் கொடுத்த இந்திய அணி: ஆஸ்திரேலியா 67/7  

பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளை​யாடு​வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்​தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் ரோஹித் சர்மா விளை​யாடாத​தால் இந்திய அணியானது வேகப்​பந்து வீச்​சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமை​யில் களமிறங்​கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில், நிதிஷ்குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்து 37 ரன்களையும் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காத நிலையில், 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 150 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்களில் அவுட்டானார். பும்ரா வீசிய 7வது ஓவரில் உஸ்மான் கவாஜா 8 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். ட்ராவிஸ் ஹெட் 11 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 6 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். மார்னஸ் லாபுசாக்னே 52 பந்துகளில் வெறும் 2 ரன்களைச் சேர்த்து வெளியேறினார். பாட் கம்மின்ஸ் 3 ரன்களில் அவுட்டாக ஆட்டம் இந்தியா கைக்குள் சென்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 83 ரன்கள் இந்திய அணி பின்தங்கியுள்ளது. மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களுடனும், அலேக்ஸ் கேரி 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷீத் ராணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிக விக்கெட்டுகள்: இன்றைய நாள் ஆட்டத்தில் மட்டும் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 1952-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் நாள் ஆட்டத்தில் அதிகபட்ச விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x