Published : 22 Nov 2024 11:31 AM
Last Updated : 22 Nov 2024 11:31 AM

சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு சாதகம் என்ற மரபு எங்கே போனது?- கே.எல்.ராகுலின் வேதனை!

கே.எல்.ராகுல்

பெர்த் டெஸ்ட் போட்டி கிரீன் டாப் பிட்சில் தொடங்கி உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் என்று தடுமாற்றமான தொடக்கம் கண்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது நடுவர் தீர்ப்பு என்னும் கோடரி அவர் மேல் விழுந்து வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் அவர் வெளியேற நேரிட்டது.

ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்ப் பந்து ஒன்று அவரை குறுக்காகக் கடக்க பந்து மட்டையைக் கடக்கும் போது ராகுலின் மட்டை கால்காப்பில் பட்டது, இரண்டு சவுண்ட் கேட்டதுபோல் தெரிய ஆஸ்திரேலிய வீரர்கள் முறையீடு எழுப்பினர், களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. கமின்ஸ் மூன்றாவது நடுவர் தீர்ப்புக்கு முறையிட்டார்.

அந்த ரீப்ளேயில் பெரிய எட்ஜ் போல் காட்டப்பட்டது, ஆனால் எட்ஜ் திருப்திகரமாக இல்லை, பொதுவாக மட்டைக் கால்காப்பில் படும்போது ஒரு கோடும், பந்து மட்டையில் பட்டதற்கான இன்னொரு கோடும் ஸ்னிக்கோ மீட்டரில் தெரியும், ஆனால் இந்த ரீப்ளேயில் ஏதோ சைடு ஆங்கிளில் காட்டி பெரிய எட்ஜ் போல் காட்டப்பட்டது. அதன் படி நடுவர் அவுட் கொடுக்க வேண்டும் என்று களநடுவர் தீர்ப்பு மாற்றி அமைக்கப்பட்டு ராகுல் வெளியேற நேரிட்டது, தலையை ஆட்டியபடியே அவர் வெளியேறினார், சில வார்த்தைகளையும் அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.

காரணம், நேரான ஆங்கிளில் எட்ஜ் காட்டப்படவில்லை, அவர் கால்காப்பில் மட்டைபடும்போது பந்து கடந்து செல்வதான சைடு ஆங்கிள் அவுட் ஆனது போல் காட்டுகிறது, ஆனால் மஞ்சுரேக்கர் கூறுவது போல் பந்து மட்டையில் பட்டதற்கு ஒரு ஸ்பைக்கும், கால்காப்பில் பட்டதற்கு இன்னொரு ஸ்பைக்கும் 2 ஸ்பைக்குகள் எங்கே என்று கேள்வி எழுப்பினார். இது மிகவும் சரியே. ஆனால் வர்ணனையில் காட்டப்பட்ட ஒரு கோணத்தில் பந்து மட்டையைக் கடந்து சென்ற பிறகே மட்டை கால்காப்பில் பட்டது போல் தெரிந்தது, இது ஒளிபரப்பாளர்களின் காமிரா கோணம், 3வது நடுவர் பார்த்தது பக்கவாட்டு கோணம். ஆகவே அந்தக் கோணத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்?

மேலும் அனைத்திற்கும் மேலாக benefit of doubt goes to batsmen என்ற ஒரு மரபான சம்பிரதாயம் இருந்தது, இப்போதெல்லாம் அது காணாமல் போய் விட்டது தொழில்நுட்பமும் துல்லியமாக இல்லை என்னும் பட்சத்தில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குச் சாதகம் என்ற அடிப்படையில் ராகுல் நாட் அவுட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் குறிப்பாக களநடுவர் அவுட் கொடுக்கவில்லை எனும்போது முடிவெடுக்கமுடியாத ஒரு கோணத்தில் பார்த்து களநடுவரின் தீர்ப்பை மாற்றுவது தவறு என்றே படுகிறது.

ராகுல் கிரீசில் பின்னால் நின்று கொண்டு நன்றாக நகர்ந்து விட வேண்டிய பந்தை விட்டு, ஆட வேண்டிய பந்தை ஆடி கொஞ்சம் தெளிவாக ஆடிக்கொண்டிருந்தார், அவர் நம்பிக்கை துளிரும் தருணத்தில் இத்தகைய தீர்ப்பு அவரது வேதனையை அதிகரிக்கவே செய்யும்.

முன்னதாக பும்ரா டாஸில் வென்று பேட் செய்ய முடிவெடுத்தார். அவர் முடிவு சரியானதே, பிட்ச்சில் பவுன்ஸ் உள்ளது, ஆனால் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை. 25-30 ஒவர்கள் விக்கெட் விடாமல் ஆடினால் நிச்சயம் பிட்ச் ஒருவேளை நாளை எகிறத் தொடங்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், ஹாசில்வுட் அதியற்புதமான துல்லிய லெந்தில் வீசினர்.

பயந்து பயந்து ஆடும் இந்திய வீரர்கள் ஆஃப் வாலி பந்தைக் கூட பவுண்டரிக்கு விரட்ட முடியாமல் தவித்தனர். படிக்கல், ஜெய்ஸ்வால் பரிதாபம் தான். டக் அவுட் ஆயினர். விராட் கோலி உண்மையில் டெக்னிக்கை மறந்து விட்டார் போலும், கிரீசிற்கு வெளியே நின்று கொண்டு எல்லா பந்துகளுக்கும் மட்டையைக் கொண்டு சென்றார். அது மோசமான ஒரு டெக்னிக், அப்போதுதான் ஹேசில்வுட் ஒரு பந்தைக் குத்தி எழுப்ப மட்டையின் மேல் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார். மீண்டும் ஒரு தோல்வி. ஆஸ்திரேலியா பந்து வீச்சு அற்புதமாக உள்ளது. ஆனாலும் ராகுல் அவுட் தீர்ப்பை மறு பரிசீலனை செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x