Published : 22 Nov 2024 02:49 AM
Last Updated : 22 Nov 2024 02:49 AM
பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றிருந்தது. இதனால் இம்முறையும் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சந்திக்கிறது இந்திய அணி. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும். ஷுப்மன் கில் காயம் அடைந்துள்ளதால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.
4-வது இடத்தில் வழக்கம் போல விராட் கோலி களமிறங்குவார். 5-வது இடத்தில் துருவ் ஜூரெல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், சிறப்பாக செயல்பட்டிருந்தார். துருவ் ஜூரெல் களமிறங்கும் பட்சத்தில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.
6-வது இடத்தில் ரிஷப் பந்ந் களமிறங்குவார். மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. பெர்த் ஆடுகளம் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் விளையாடும் லெவனில் நித்திஷ் குமார் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரீத் பும்ராவுடன், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் அல்லது ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா இடம் பெறக்கூடும்.
சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறுவதில் அஸ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவக்கூடும். இதில் அஸ்வின் இடம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
இதனால் இந்திய அணி நெருக்கடியுடனேயே களமிறங்குகிறது. இதுஒருபுறம் இருக்க ரோஹித் சர்மா களமிறங்காதது, ஷுப்மன் கில் காயம் அடைந்துள்ளது, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது சிராஜ் பந்து வீச்சிலும் பார்மின்றி தவிப்பது இந்திய அணியின் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. இந்திய அணியில் உள்ள சிலசீனியர் வீரர்களுக்கு இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் கடைசியாக அமையக்கூடும்.
ஏனெனில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த 2 ஆண்டு கால சுழற்சி 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகே தொடங்குகிறது. அஸ்வின் 38 வயதையும், ரோஹித் சர்மா 37 வயதையும் கடந்துவிட்டனர். விராட் கோலி 36 வயதை கடந்துள்ள நிலையில், ஜடேஜா 36 வயதை நெருங்க உள்ளார். ஒருவேளை இந்திய அணிஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெற தவறினால் இவர்களில் சிலர் தங்களது டெஸ்ட்கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 4 முறை இழந்துள்ளது.
அதில் இரு முறை சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருந்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அந்த அணி டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதனால் இம்முறை பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
வீரர்களுக்கு சரியான ஓய்வு வழங்கப்பட்டதால் சிறந்த முறையில் தயாராகி உள்ளனர். தொடக்க வீரராக நேதன் மெக்ஸ்வீனி அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். இதனால் ஸ்டீவ் ஸ்மித் நடுவரிசையில் 4-வது வீரராக களமிறங்கக்கூடும். 3-வது இடத்தில் மார்னஷ் லபுஷேன் விளையாடக்கூடும். இவர்களைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி ஆகியோர் பேட்டிங் வரிசையை பலப்படுத்தக்கூடும். வேகப்பந்து வீச்சில் கேப்டன் பாட் கம்மின்ஸுடன் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் நேதன் லயன் அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.
இந்தியா: ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நித்திஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா. நேரம்: காலை 7.50; நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
பொறுப்பை நேசிக்கிறேன்: பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பும்ரா கூறும்போது, “முதல் டெஸ்ட் போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம். நான் பொறுப்பை நேசிக்கிறேன். சிறுவயதிலிருந்தே கடினமான வேலையை செய்ய விரும்புவேன். என் உள்ளுணர்வு மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. விராட் கோலியை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் அவரது தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானேன். அவருக்கு எந்தவிதமான சிறப்பு உள்ளீடுகளையும் நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் எத்தனை போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது முக்கியமில்லை. தன்னம்பிக்கைதான் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்துகிறது.
நாங்கள் நியூஸிலாந்து தொடரிலிருந்து கற்றுக்கொண்டவற்றை உள்வாங்கி முன்னேற வேண்டும். இந்தியாவில் நிலைமைகள் வேறுபட்டவை, இங்குள்ள நிலைமைகள் வேறுபட்டவை, இங்கு நாங்கள் ஏற்கெனவே மாறுபட்ட முடிவுகளைப் பெற்றுள்ளோம். எங்கள் வீரர்களுக்கு நல்ல மற்றும் மோசமான நாட்களை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால், நல்ல நாட்களைப் போலவே, மோசமான நாட்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
சவாலாக இருக்கும்: பாட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதும் அழுத்தம் இருக்கும். இந்திய அணி திறமையானது என்பதால், இந்த தொடர் நல்ல சவாலாக இருக்கும். பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும். இந்தியா ஒரு சிறந்த அணி, ஆனால் நாங்கள் நன்கு தயாராகி இருக்கிறோம். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நித்திஷ் குமார் ரெட்டி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அவர், பெரிதாக பந்து வீசவில்லை. அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும், மிகவும் திறமையானவர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT