Published : 21 Nov 2024 02:34 PM
Last Updated : 21 Nov 2024 02:34 PM

சேவாக்கின் 195 மற்றும் 151 ரன் சதங்கள் ஒளிபரப்பாளர்களால் ஓரங்கட்டப்படுவது ஏன்?

சேவாக் | கோப்புப்படம்

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 தொடருக்கான ஒளிபரப்பாளர்கள் இந்தத் தொடர் குறித்த பில்ட்-அப் நிகழ்ச்சிகளை தினசரி ஒளிபரப்பி வருகின்றன. இந்த பில்ட்-அப் நிகழ்ச்சிகளில் ஒன்றிலாவது சேவாக்கின் அதியற்புத இன்னிங்ஸ்களோ, அவரது முக்கிய பந்து வீச்சு பங்களிப்புகளோ காட்டப்படுவதில்லை என்பது ஏன் என்ற கேள்வி உட்பட பல ஐயங்களை எழுப்புவதாக உள்ளது.

அதாவது 2024 பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஒளிபரப்பாளர்களான தொலைக்காட்சி ஊடகம் ‘வொண்டர் டவுன் அண்டர்’, உள்ளிட்ட பல முந்தைய தொடர்களைப் பற்றிய வீடியோ காட்சிகள், வர்ணனைகள், கருத்துகளை ஒளிபரப்புகின்றன. அதில் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லஷ்மண், திராவிட், கங்குலி உள்ளிட்டோரின் இன்னிங்ஸ்களைக் காட்டுகின்றனர். அடுத்தக்கட்டமாக விராட் கோலி, புஜாரா (இவர் கொஞ்சம்தான்), ரிஷப் பந்தை காட்டுகின்றனர், ஷுப்மன் கில்லும் இடம்பெறுகிறார்.

2003-04 தொடரைப் பொறுத்தவரை அடிலெய்டில் அகார்க்கரின் அற்புதமான 6 விக்கெட்டுகளையடுத்து இந்தியா 23 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட்டில் வெல்வதைக் காட்டிப் புகழ்கின்றனர். திராவிட் எடுத்த 233 மற்றும் 78 விதந்தோதப்படுகிறது. முதல் பிரிஸ்பன் டெஸ்ட்டில் கங்குலி எடுத்த 144 ரன்கள் விதந்தோதப்படுகிறது. விவிஎஸ் லஷ்மணின் சதங்கள் புகழப்பட்டன. சச்சினின் 241 பெரிய அளவில் புகழப்பட்டு காட்டப்பட்டது. ஆனால் இந்தத் தொடரில் மெல்போர்னில் சேவாக் எடுத்த அதிரடி 195 ரன்கள் பற்றி ஒரு பேச்சும் இல்லை, மூச்சும் இல்லை. இது மட்டுமல்ல சேவாக் பிரிஸ்பனில் எடுத்த 45 அதிரடி தொடக்க ரன்கள் பற்றி ஒரு கிளிப்பிங் கூட இல்லை.

இதே பிரிஸ்பனில் ஜாகீர் கான் எடுத்த 5 விக்கெட்டுகள் பற்றியும் பேச்சு மூச்சு இல்லை. அதே போல் அடிலெய்டில் ஆகாஷ் சோப்ரா - சேவாக் கூட்டணியின் 66 ரன்கள் என்ற முக்கியமான பங்களிப்பு மறக்கப்படுவது ஏன்? அதில் சேவாக் 41 பந்துகளில் 47 ரன்களை விளாசி 15 ஓவர்களில் ஸ்கோரை 84 ரன்களுக்குக் கொண்டு சென்றதால்தான் புதிய பந்து கொஞ்சமாவது தேய்ந்து திராவிடுக்கு ஆட வாகாக இருந்தது என்ற டெக்னிக்கல் உண்மையும் இந்த தொலைக்காட்சி நினைவுத் தொடரில் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமே.

அதே போல் அடிலெய்டில் 230 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது சேவாக் மீண்டும் 81 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 27-வது ஓவரில்தான் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவில் முதல் 30 ஒவர்களுக்குப் பிறகு பந்துகள் மென்மையாகிவிடும் அதன் பிறகு ஆடுவது சுலபம். திராவிட் 78 ரன்களை எடுத்து வெற்றி பெறச் செய்தார். ஆனால் அதன் பின்னணியில் சேவாக்கின் அதிரடி இருப்பது ஏன் கண்டுகொள்ளப்படவில்லை?

அடுத்து மெல்போர்ன் டெஸ்ட். பாக்சிங் டே, மெல்போர்னில் 80 முதல் 85 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரம். டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. தோற்ற ஆஸ்திரேலியா நிச்சயம் இந்த டெஸ்ட்டில் இந்தியாவைப் புரட்டி எடுக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக சேவாக் ஆஸ்திரேலிய பவுலிங்கைப் புரட்டி எடுத்தார்.

ஆகாஷ் சோப்ராவும் சேவாக்கும் 43 ஓவர்களில் 141 ரன்கள் கூட்டணி, என்ன மாதிரியான கூட்டணி புதிய பந்து சிதைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு சேவாக்கின் ருத்ர தாண்டவம் ஆரம்பம். ஆஸ்திரேலிய பீல்டர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. சேவாக் 233 பந்துகளில் 25 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 83.69 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 195 ரன்களை விளாசினார். அதுவும் 195-லிருந்து சிக்ஸ் அடிக்கப் போய் டீப்பில் கேட்ச் ஆனார். இடது கை சைனாமேன் பவுலர் சைமன் கேட்டிச்சின் புல்டாசில் கேட்ச் கொடுத்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸை வர்ணனையில் இருந்த இயன் சாப்பல், மேற்கு இந்தியத் தீவுகள் லெஜண்ட் ராய் பிரெட்ரிக்ஸின் பாக்சிங் டே சதத்திற்குப் பிறகு பாக்சிங் டேயில் மெல்போர்ன் கண்ட அதியற்புத அதிரடி சதம் என்று பாராட்டினார். ஆனால் நம்மவர்களுக்கோ அந்த இன்னிங்ஸைக் காட்டக்கூட பிடிக்கவில்லை என்பது வருத்ததிற்குரியது. 1 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களில் இருந்து சேவாக் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி சரிவு கண்டு 366 ரன்களுக்குச் சுருண்டு டெஸ்ட் போட்டியை இழந்தது. இத்தகைய நல்ல தொடக்கத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் மற்ற வீரர்கள் மடிந்தது அதை விட வேதனை.

இதே தொடரில் 4-வது டெஸ்ட் சிட்னியில் சேவாக்கும் ஆகாஷ் சோப்ராவும் மீண்டும் 40 ஒவர்களில் 123 ரன்கள் கூட்டணி அமைத்தனர். சேவாக் 115 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 72 ரன்கள் விளாசினார், சோப்ரா 45 ரன்கள் எடுத்தார். இந்தப் புரட்டலுக்குப் பிறகுதான் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்களை மந்தகதியில் எடுத்தார். லஷ்மண் 178 ரன்கள் எடுத்தார். 187 ஓவர்கள் ஆடி 705 ரன்கள் வரை போயிருக்க வேண்டிய தேவையில்லை. இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடி போட்டியை வெற்றி பெறும் வாய்ப்பைக் கோட்டை விட்டனர் இந்தியா. மீண்டும் 2-வது இன்னிங்ஸில் சேவாக் 50 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். இந்தியா 211 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 443 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து டிரா செய்தது.

சேவாக்கின் இந்தப் பங்களிப்பையெல்லாம் ஒளிபரப்பாளர்கள் ஓரங்கட்டுவது ஏன்? - 2008ல் மீண்டும் அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்ட குழப்பங்களில் சேவாக் பலிகடாவாக்கப்பட்டார், அணியிலிருந்து நீக்கப்பட்டார். வாசிம் ஜாஃபர் தொடக்க வீரராகச் சென்றார். ஆனால் மெல்போர்னில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அனாயசமாக தோற்கடித்தது, அதுவும் இந்திய ரக பிட்சைப் போட்டே தோற்கடித்தனர். அடுத்து சிட்னி டெஸ்ட்டில் நடுவரின் திருவிளையாடலினால் ஏகப்பட்ட சர்ச்சைகளில் ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்தது.

அப்போது இயன் சாப்பல் ஒன்று கேட்டார், ‘வேர் இஸ் விரூ?’ என்று ஒரு பத்தியே எழுதினார். சேவாக் எங்கே என்று அவர் கேட்டது எப்படியோ அனில் கும்ப்ளே காதில் ஒலிக்க, சேவாக் பெர்த் டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் 29 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 43 ரன்கள். அதோடு சேவாக் 2 விக்கெட்டுகள். இதை ஓரளவுக்கு ஒளிபரப்பாளர்கள் காட்டினார்கள், அப்படியும் சேவாக் மீண்டும் வந்ததோ, வெற்றியில் அவரது பங்களிப்பையோ விதந்தோதவில்லை.

தொடர் 2-1 என்று ஆஸ்திரேலியா முன்னிலை பெற்ற நிலையில் அனில் கும்ப்ளே கேப்டன்சி பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு முதல் முறையாக அச்சம் ஏற்பட அடிலெய்டில் கடைசி டெஸ்ட். இதில் சேவாக் முதல் இன்னிங்ஸில் 63 ரன்களை விளாசினார். சச்சின் 153 எடுக்க கும்ப்ளே 87 ரன்களையும் ஹர்பஜன் 63 ரன்களையும் விளாச இந்தியா 526 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா 181 ஓவர்கள் ஆடி மிகவும் நிதானமாக 563 ரன்களை எடுத்தனர். 2-வது இன்னிங்ஸில் பிட்ச் கொஞ்சம் பிளவு கண்டிருந்தது.

ஆனால், சேவாக் 151 ரன்களை எடுத்து 6-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 236 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் அவர் 151 ரன்களை எடுத்தது, அவரது இன்னிங்ஸ்களிலேயே பொறுப்பான, மெதுவான, விவேகமான இன்னிங்ஸ் ஆகும். அதுவும் ஒரு செஷன் முழுதும் பவுண்டரி அடிக்காமலேயே ஆடினார். சச்சின் 241 எடுத்த போது ஆஃப் திசையையே மறந்து விட்டு ஆடியதை பெரிய விஷயமாக பேசிய ஊடகங்கள், ஒரு செஷன் முழுதும் பவுண்டரி அடிக்காமலேயே அதுவும் சேவாக் ஆடியதை மறந்தது ஏனோ? இந்த இன்னிங்ஸ்களை மறக்க முடியுமா? ஏன் பேசவில்லை என்பது ஆச்சரியத்துடன் கலந்த வருத்தத்தையும் எழுப்புகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x