Published : 21 Nov 2024 12:11 PM
Last Updated : 21 Nov 2024 12:11 PM
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள நிலையில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் பெரிதும் நம்பிக்கை வைத்து அவரது திறமைகளை விதந்தோதியுள்ளார்.
குறிப்பாக இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதிஷ் குமார் ரெட்டியை கூர்ந்து கவனியுங்கள் என்று மோர்கெல் கூறுகிறார் என்றால் விஷயம் இல்லாமல் இப்படி அவர் கூற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
ஆப்டஸ் ஸ்டேடியம் வலையில் நேற்றும் இன்றும் பும்ரா, சிராஜ் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா போன்ற பவுலர்களில் ஆடும் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு ஆல்ரவுண்டர் என்பதால் நிதிஷுக்கு கிடைக்கும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுடன் ஆஸ்திரேலியாவில் பவுலிங் செய்வது எப்படி என்று தன் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் மோர்னி மோர்கெல். “இந்த இளம் பவுலர்கள் அணியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்திய பவுலிங் அட்டாக்கில் பல விதமான பந்துகளை வீசுவதற்கு இவர்களிடம் திறமை இருக்கிறது. குறிப்பாக ஹர்ஷித் ராணா. இவர் நல்ல வேகத்தில் வீசுகிறார். பிட்சிலிருந்து பந்திற்கு உரிய பவுன்ஸை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு வருவது என்பதிலும் இவரிடம் திறமை உள்ளது.
இது இவர்களது முதல் பயணம். ‘இந்தியா ஏ’ அணியில் பிரசித் கிருஷ்ணா இத்தகைய பிட்ச்களில் கொஞ்சம் பரிச்சயம் கொண்டுள்ளார். ஆனால், ஹர்ஷித் ராணாவுக்கு இந்த கண்டிஷன் புதிது. என்னைப் பொறுத்தவரையில் நம்மளவில் நாம் நம் ஆட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அங்கு ஆடுவது பற்றி நிறையக் கதைகள் சொல்வார்கள். ஆனால், நமக்கு நாம் தான் சரியான ஆசிரியர்.
நிதிஷ் ரெட்டி ஒரு இளம் வீரர். அவரிடம் பேட்டிங், பவுலிங் என்று ஆல்ரவுண்ட் திறமை உள்ளது. ஒருமுனையில் இறுக்கமாக அவரால் வீச முடியும். அவரது பந்துகள் மட்டையை நாம் நினைப்பதை விட வேகமாகத் தாக்குகின்றன. எனவே பெர்த் உள்ளிட்ட கண்டிஷனில் கொஞ்சம் ஸ்விங் உள்ளதால் நிதிஷ் ரெட்டி துல்லியமாக பந்து வீசி விக்கெட் வீழ்த்த முடியும். அவர் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் பவுலர். ஒரு ஆல்ரவுண்டர் வாய்ப்பைப் பெறுவது பிரமாதமானது.
ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால் அவர் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பார். நிதிஷ் ரெட்டிதான் இந்தத் தொடரில் நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டிய வீரர் என்று நான் கூறுகிறேன். பிட்ச்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக எகிறும் பந்துகள் அதிகம் இருக்கும். எனவே தனிப்பட்ட வீரர்கள் தங்களுக்கான உத்தியை வகுத்தெடுப்பதுதான் சிறந்தது. அடுத்த 43 நாட்கள் மிக மிகக் கடினமான காலக்கட்டம்” என மோர்னி மோர்கெல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment