Published : 20 Nov 2024 01:33 PM
Last Updated : 20 Nov 2024 01:33 PM

AUS vs IND முதல் டெஸ்ட்: பெர்த் போட்டியில் ஆடும் லெவனில் படிக்கல், ஜுரெல்?

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பந்துகள் எகிறும் பெர்த் ஆப்டஸ் மைதான ஆடுகளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மறுநாள் (நவ.22) ஆடுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய லெவன் என்னவென்பது அனைவருக்கும் ஆர்வத்தைக் கிளப்பக் கூடிய ஒன்று.

ஏனெனில், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க வீரர் இடத்துக்கு முன்னேற்றப்படுகிறார். ராகுல், ஜெய்ஸ்வால் தொடங்க அடுத்த 3-ம் நிலையில் ஆடும் ஷுப்மன் கில்லும் காயம் காரணமாக இல்லாததால் தேவ்தத் படிக்கல் அந்த இடத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-ம் நிலையில் விக்கெட் கீப்பர் ஜுரெல் இறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப் படமாட்டாது என்று தெரிகிறது.

‘ஆஸ்திரேலியா - ஏ’ அணிக்கு எதிராக துருவ் ஜுரெல் அற்புதமாக ஆடினார். தேவ்தத் படிக்கல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பியது ராகுல். இருப்பினும் அவருக்கு ஓப்பனிங் பேட்டர் புரொமோஷன். இந்தக் கூத்தெல்லாம் இந்திய அணி தேர்வில்தான் நடக்கும். வேறெங்கும் நடக்காது.

படிக்கல்லின் உயரம் ஃபுல் லெந்த் பந்துகளை ட்ரைவ் ஆடுவதற்கும் பந்துகள் எழும்பும்போது ட்ரைவ் ஆடுவதற்கும் ஏதுவானது. ஆனால் இந்தப் பிட்ச்களில் அந்த ஆட்டம் எடுபடுவது கடினம். அவரது மட்டை எட்ஜிற்கு நிறைய வேலை வைப்பார்கள் ஆஸ்திரேலிய பவுலர்கள். அபிமன்யு ஈஸ்வரனை அதற்குள் ஓப்பனிங்கில் கொண்டு வருவது அதுவும் பெர்த்தில் கொண்டு வருவது அவரது கரியருக்கு ஆப்பு வைப்பதில்தான் போய் முடியும்.

விராட் கோலி 4-ம் நிலையிலும், ரிஷப் பண்ட் 5-ம் நிலையிலும் களம் காண்பது உறுதியானது. 6-ம் நிலைக்கு சர்பராஸ் கானுக்கும், துருவ் ஜுரெலுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் சர்பராஸ் கானின் திறமையை இந்திய அணி நிர்வாகம் ஒரு சந்தேகக் கண் கொண்டே அணுகுகின்றது என்பது நமக்கு இதுவரை தெரிந்ததுதான். எனவே துருவ் ஜுரெலுக்குத்தான் வாய்ப்பு என்று தெரிகிறது. ஒருவேளை மாறினால் ஆச்சரியம்தான்.

நமது ஆலோசனை என்னவெனில் துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஓப்பனிங் இறக்கி விட்டு சர்பராஸ் கானை 6-ம் நிலையில் வைப்பது சிறந்தது, ராகுல் தொடக்க வீரராக தாக்குப் பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் பும்ரா நிச்சயம். இவருக்கு ஜோடியாக ஹர்ஷித் ராணா பெயர் அடிபடுகிறது. 22 வயதுதான் ஆகிறது. பயிற்சி, உள் அணி மேட்சில் நன்றாக வீசியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அனுபவம் அற்றவர், ஆகாஷ் தீப் நிச்சயம் ஆட வேண்டும், அவர் நிரூபிக்கப்பட்ட ஒரு வேகப்பந்து வீச்சாளர். சிராஜ் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நன்றாக வீசியதால் நிச்சயம் அவருக்கு அனுபவத்தின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கவே வேண்டும். ஸ்பின்னிற்கு நிச்சயம் அஸ்வின் தான். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகிய இடது கை வீரர்கள் உள்ளனர். ஜடேஜா நீண்ட நேரம் நெட்டில் பேட்டிங் பயிற்சி செய்ததாக கிரிக் இன்போ செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய உத்தேச லெவன் இப்படி இருக்கலாம்: கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், அஸ்வின், பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்/நிதிஷ் ராணா, ஜடேஜா/நிதிஷ் ரெட்டி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x