Published : 20 Nov 2024 08:29 AM
Last Updated : 20 Nov 2024 08:29 AM
சென்னை: எஃப்ஐபிஏ ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி வரும் 2025-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. போட்டியை நடத்தும் சவுதி அரேபியா நேரடியாக தகுதி பெற்ற நிலையில் மற்ற அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தகுதி சுற்றில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இவை 6 பிரிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல்கட்ட தகுதி சுற்றில் இந்திய அணி ஈரானிடம் 86-53 என்ற கணக்கிலும் கஜகஸ்தானிடம் 50-63 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 22 மற்றும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 22-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கத்தாருடனும், 25-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கஜகஸ்தானுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு போட்டியிலும் பங்கேற்கும் இந்திய அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த முயின் பெக் ஹபீஸ் கேப்டனாக செயல்பட உள்ளார்.
அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த பாலதனேஷ்வர் பொய்யாமொழி, அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன், பிரசாந்த் சிங் ராவத், பிரணவ் பிரின்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர். மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகுதி சுற்று போட்டிகளை சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (எஃப்ஐபிஏ) இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 15 ஆண்டுக்குப் பிறகு தற் போதுதான் சென்னையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு எஃப்ஐபிஏ மகளிர் ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றிருந்தது.
இந்திய அணி விவரம்: முயின் பெக் ஹபீஸ் (கேப்டன்), பாலதனேஷ்வர் பொய்யாமொழி, அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன், பிரசாந்த் சிங் ராவத், பிரணவ் பிரின்ஸ், அம்ஜியோத் சிங், சஹாய்ஜ் பிரதாப் சிங் சேகோன், கன்வர் குர்பாஸ் சிங் சாந்து, ஹர்ஷ் தாகர், குஷால் சிங், பல்பிரீத் சிங் பிரார், பிரின்சிபல் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT