Published : 19 Nov 2024 03:06 PM
Last Updated : 19 Nov 2024 03:06 PM
இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை 2018-19 மற்றும் 2020-21 என வென்றது. இதில் இந்திய அணியின் கடந்த முறை பயணம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத டெஸ்ட் தொடராகும்.
ஏனெனில் கரோனா தாக்கம், அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, கோலி இல்லாதது, காயம் காரணமாக சீனியர் வீரர்கள் அடுத்தது போட்டிகளில் ஆட முடியாதது என பல சவால்களை இந்தியா எதிர்கொண்டது.
இருப்பினும் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டு வெற்றி தேடி தந்தனர். அவர்களுக்கு உறுதுணையாக சீனியர் வீரர்களான ரஹானே, புஜாரா, அஷ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் இருந்தனர். இதற்கு அணியின் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் முக்கிய காரணம். இந்திய அணியின் செயல்பாட்டை அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வியந்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹானே: கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பிய நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் அணியை திறம்பட வழிநடத்தினார் கேப்டன் ரஹானே. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ரஹானேவின் சதம். பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். அவரது தலைமையிலான இந்திய அணி மூன்றாவது போட்டியை டிரா செய்தது, நான்காவது போட்டியில் வெற்றியின் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த தொடருக்கு பின்னர் ரன் சேர்க்க தடுமாறிய காரணத்தால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணியை ரஹானே வழிநடத்தி வருகிறார். அவர் மீண்டும் தேசிய அணியில் இடம்பெறுவது சவாலான காரியமாக பார்க்கப்படுகிறது.
புஜாரா: கடந்த முறை ஆஸி. மண்ணில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்டவது புஜாரா தான். மொத்தம் 928 பந்துகளை எதிர்கொண்டு 271 ரன்களை எடுத்தார். மூன்று அரை சதங்களை அவர் பதிவு செய்திருந்தார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை மிகவும் திறம்பட கையாண்டார். குறிப்பாக சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது.
36 வயாதான அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடி உள்ளார். இளம் வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கொண்டு வரும் இந்திய அணியின் யுக்தி காரணமாக புஜாராவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் மற்றும் இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார்.
ஹனுமா விஹாரி: அஷ்வினுடன் கடந்த ஆஸி. பயணத்தில் சிட்னி டெஸ்ட் போட்டியில் 258 பந்துகளுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை டிரா செய்தார் விஹாரி. அந்தப் போட்டியில் தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இருப்பினும் அவரது மன உறுதியினால் முக்கியமான தருணத்தில் நேர்த்தியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். அதன் பின்னர் காயம் உள்ளிட்ட காரணத்தால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அஷ்வின்: வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் அஷ்வின். அதற்காக லைன் மற்றும் லெந்தில் அவர் பணியாற்றி இருந்தார். அதன் பலனாக ஸ்மித் மற்றும் லபுஷேன் என ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 500+ விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. நடப்பு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
ரிஷப் பந்த்: கடந்த முறை இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக பந்த் திகழ்ந்தார். மூன்று போட்டிகளில் ஆடி 274 ரன்கள் எடுத்திருந்தார். சிட்னி போட்டியில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஷாட் தேர்வு கவனம் ஈர்த்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். இடையில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்து அணிக்குள் திரும்பியுள்ளார்.
ஷுப்மன் கில்: கடந்த ஆஸி. பயணத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக கில் களம் கண்டார். மூன்று போட்டிகளில் ஆடி 259 ரன்கள் எடுத்தார். இரண்டு அரை சதங்களை பதிவு செய்தார். குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். நடப்பு ஆஸி. தொடருக்கான அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் கிடைத்துள்ளது.
முகமது சிராஜ்: கில் உடன் சேர்ந்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிராஜ் அறிமுகமானார். தந்தையின் மறைவு செய்தி அவரை துயரத்தில் ஆழ்த்திய போதும் தேசத்துக்காக களம் கண்டார். தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. சிட்னி போட்டியில் இனவெறி ரீதியான கமெண்ட் அவரை நோக்கி பார்வையாளர்கள் சிலர் வைத்திருந்தனர். இந்த சவால்களை கடந்தது அந்த தொடரில் 13 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். இந்தியா சார்பில் கடந்த முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சிராஜ் தான்.
ஷர்துல் தாக்குர்: கடந்த முறை பிரிஸ்பேனில் காபா மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் அரை சதம் கடந்து தாக்குர் அசத்தினார். வெளிநாட்டு தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக அவர் பார்க்கப்பட்டாலும் இந்த முறை ஆஸ்திரேலிய தொடரில் அவர் இடம்பெறவில்லை.
வாஷிங்டன் சுந்தர்: 2020-21 சுற்றுப்பயணத்தில் காபா போட்டியில் அறிமுக வீரராக வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். முதல் இன்னிங்ஸில் அரை சதம் விளாசினார். அந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இந்திய அணிக்காக அனைத்து பார்மேட்டிலும் விளையாடி வருகிறார். நடப்பு பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
நடராஜன்: 2020-21 ஆஸ்திரேலிய பயணத்தில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று பார்மெட்டிலும் அறிமுக வீரராக நடராஜன் விளையாடினார். காபா டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அணிக்குள் அவரது என்ட்ரி உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது. காபாவில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டியாக அது உள்ளது. இடது கை பந்துவீச்சாளரான அவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியில் இடம் பிடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். பும்ரா கடந்த முறை 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
நடப்பு சுற்று பயணத்தில் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சர்பராஸ் கான், துருவ ஜூரல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இளம் வீரர்கள் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT