Published : 14 Nov 2024 08:13 AM
Last Updated : 14 Nov 2024 08:13 AM
சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், மணிப்பூர் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
பஞ்சாப் அணி தரப்பில் மணீந்தர் சிங் (18-வது நிமிடம்), ரவ்னீத் சிங் (24 மற்றும் 59-வது நிமிடங்கள்) கோல் அடித்தனர். மணிப்பூர் அணி சார்பில் கேப்டன் சிரில் லுகுன் ஹாட்ரிக் கோல் (14, 36 மற்றும் 51-வது நிமிடம்) அடித்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
2-வது கால் இறுதி ஆட்டத்தில் ஹரியானா 5-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. ஹரியானா அணி சார்பில் ரோஹித் ஹாட்ரிக் கோல் (53, 59 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். ரஜிந்தர் சிங் (48-வது நிமிடம்), பங்கஜ் (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
3-வது கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தரபிரதேசம் மோதின. இதில் தமிழ்நாடு அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. உத்தரபிரதேசம் அணி சார்பில் சந்தன் சிங் (3-வது நிமிடம்), ராஜ்குமார் பால் (18-வது நிமிடம்), லலித் குமார் உபாத்யாய் (34-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் சண்முகவேல் 9-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
4-வது கால் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா - ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஒடிசா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதி ஆட்டங்கள் நாளை (15-ம் தேதி) நடைபெறுகின்றன. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் - ஒடிசா அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா - உத்தரபிரதேசம் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT