Published : 14 Nov 2024 08:03 AM
Last Updated : 14 Nov 2024 08:03 AM
சென்னை: 76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருன் 52-வது ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இணைத்து நடத்தப்படுகிறது.
இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச சைக்கிளிங் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த போட்டியை நாளை (15-ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த தொடரில் தமிழகத்தில் இருந்து மட்டும் 40 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தான்யா பங்கேற்கிறார்.
சீனியர் சாம்பியன்ஷிப்பில் 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் எலைட் ஆடவர் பிரிவில் ஆயிரம் மீட்டர் தனிநபர் டைம் டிரையல், ஸ்பிரின்ட், 4 ஆயிரம் மீட்டர் தனிநபர் பியூர்சூட், ஓம்னியம், கெய்ரின், 15 மீட்டர் ஸ்கிராட்ச் ரேஸ், 4 ஆயிரம் மீட்டர் அணிகள் பியூர்சூட், அணிகள் ஸ்பிரின்ட் (3 ரைடர்கள், 3 சுற்று), மேடிசன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
எலைட் மகளிர் பிரிவில் 500 மீட்டர் தனிநபர் டைம் டிரையல், ஸ்பிரின்ட், 3 ஆயிரம் மீட்டர் தனிநபர் பியூர்சூட், ஓம்னியம், கெய்ரின், 10 மீட்டர் ஸ்கிராட்ச் ரேஸ், 4 ஆயிரம் மீட்டர் அணிகள் பியூர்சூட் (3 ரைடர்கள்), அணிகள் ஸ்பிரின்ட் (3 ரைடர்கள், 3 சுற்று) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சீனியர் பிரிவில் வீரர், வீராங்கனைகள் பெறும் புள்ளிகள் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT