Published : 12 Nov 2024 03:49 PM
Last Updated : 12 Nov 2024 03:49 PM
புது டெல்லி: பார்டர் கவாஸ்கர் டிராபி, நியூஸிலாந்துக்கு எதிராக 3-0 முற்றொழிப்பு படுதோல்வி ஆகியவை பற்றியும் விராட் கோலி, ரோஹித் சர்மா மோசமான பேட்டிங் நிலை பற்றியும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, கம்பீர் அளித்த பதில் சஞ்சய் மஞ்சுரேக்கர் உள்ளிட்டோரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
‘விராட் கோலி கடந்த 5 வருடத்தில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது சரியல்ல. இது ஒரு கவலையளிக்கும் விஷயம்’ என்று ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருந்தார். ரோஹித் சர்மாவின் ஃபார்ம் இன்மை குறித்தும் அவர் அச்சம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்கள் கம்பீரிடம் “விராட் கோலி, ரோஹித் சர்மா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கம்பீர் அவர்களே?” என்று பொருள்பட கேள்வி எழுப்பினர். ஆனால் கம்பீர் அது புரியாமல் இது ஏதோ பாண்டிங்கின் கருத்துப் பற்றிய கேள்வி என்று தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு, “இந்திய கிரிக்கெட் பற்றி பாண்டிங்கிற்கு என்ன வந்தது? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும்” என்று தெனாவட்டாகப் பதில் சொன்னார் கம்பீர்.
இது ரசிகர்கள் மத்தியிலும் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் கிரிக்கெட் கருத்துலகிலும் கம்பீரை நோக்கி கடும் முகச்சுளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரின் இத்தகைய கருத்து குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் எக்ஸ் தளப் பதிவில் கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு, “கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதைக் கேட்டேன். கேட்ட பிறகு முதல் மனப்பதிவு என்னவெனில், தயவு கூர்ந்து கம்பீரை செய்தியாளர்களிடம் அண்ட விடாதீர்கள். அவர் திரைக்குப் பின்னால் இருக்கட்டும். செய்தியாளர்களிடம் உரையாடும் திறனோ, அதற்குரிய சரியான வார்த்தையோ, சரியான நடத்தையோ அவரிடம் இல்லை. ரோஹித் சர்மா அல்லது அகார்கர் இதற்கு சிறந்த நபர்கள் என்று நினைக்கிறேன். கம்பீரிடம் செய்தியாளர்களிடம் பேசும் ஒழுக்கம் இல்லை” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு தடுமாறிக்கொண்டிருந்த இலங்கை அணியை தூக்கிவிடும் விதமாக இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வி கண்டது. இப்போது நியூஸிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் 3-0 என்று உதை வாங்கியது. இவையெல்லாம் கம்பீரின் அசட்டுத்தனமான ஆக்ரோஷ அணுகுமுறையின் விளைவே என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. விராட் கோலி கிரிக்கெட் பயிற்சியை விடுத்து அணியில் தன் ஸ்பான்சர்களுக்காக நீடிக்கிறார் என்ற விமர்சனங்களும், அவரது ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மூலம் ஊடக நிறுவனங்களுக்குச் செலவு செய்து தன்னைப் பற்றிய சாதனைகளை மீண்டு மீண்டும் ஒளிபரப்பவும் எழுத வைக்கவும் செய்கிறார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தான் இன்னமும் நல்ல ஃபார்மில் இருப்பதான ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, கருத்தொற்றுமையை உற்பத்தி செய்து முடிந்தால் என்னை அணியிலிருந்து நீக்கிப் பாருங்கள் என்று அவர் சவால் விடுக்கிறார். அவரை உட்கார வைக்க கம்பீருக்குத் தைரியம் போதவில்லை என்று பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், செய்தியாளர்களின் கேள்வி யாரை நோக்கியது என்பது புரியாமல் ரிக்கி பாண்டிங்கைத் தாக்கிப் பேசி கம்பீர் தனது முழு முற்றான துர்நடத்தையைக் காட்டியுள்ளமை சஞ்சய் மஞ்சுரேக்கரிடமிருந்து இத்தகைய விமர்சனத்தை ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT