Published : 11 Nov 2024 10:49 AM
Last Updated : 11 Nov 2024 10:49 AM

‘இந்தியாவைப் பாருங்கள்!’ - ஆஸி. கிரிக்கெட் லெஜண்ட்கள் பாராட்டு

ஆஸ்திரேலிய மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவை ஒருநாள் தொடரில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக முழு தொடரிலும் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் அரைசதமே எட்டவில்லை என்பதுதான் புதிய தாழ்வு நிலை என்று ஆஸி. ஊடகங்கள் அட்டாக்கில் இறங்கியுள்ளன. இந்நிலையில், இந்திய அணி ஒரே சமயத்தில் டெஸ்ட், ஏ அணி தொடர், தென் ஆப்பிரிக்காவில் டி20 தொடர் என்று களமிறக்குவதை ஆஸ்திரேலிய லெஜண்ட்கள் பாராட்டியுள்ளனர்.

பெர்த்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாட் கமின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாமல் களமிறங்கி படுதோல்வி கண்டது ஆஸ்திரேலியா. இதனையடுத்து மார்க் வாஹ், பெர்னர்ட் ஜூலியன், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலிய அணித் தேர்வு, பார்டர் கவாஸ்கர் டிராபி சமயத்த்தில் பாகிஸ்தானுடன் ஒருநாள், டி20 தொடர்களை வைத்து இறுக்கமான பயண அட்டவணையை உருவாக்கியது என்று சாடியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் ‘அசிங்கமான தோல்வி’ புதிய தாழ்வு என்றெல்லாம் தலைப்பு வைத்து ஆஸ்திரேலிய அணியைச் சாடி வருகின்றன. இந்நிலையில், ஜூலியன் கூறும்போது, “ஷெட்யூலிங் பெரிய சிக்கல்தான். பெர்த்திற்கு வரும்போது 5 டாப் வீரர்கள் இல்லை. இது வெட்கக் கேடு. பொதுவாக இப்படிச் செய்ய மாட்டார்கள். சிறந்த அணியே வேண்டும் தொடரை இழக்க விரும்பவில்லை என்றுதான் முடிவெடுப்பார்கள். டெஸ்ட் மேட்சிற்கு தயார்ப்படுத்துவதற்காக சிறந்த அணியை அனுப்பிவிட்டு தோல்வி அடைவது வெட்கக் கேடு” என்று சாடினார்.

மார்க் வாஹ் கூறும்போது, “இது நிச்சயம் நல்ல விஷயமல்ல, அடுத்து டி20 தொடர் ஆரம்பிக்கிறதாம்” என்றார். எத்தனை ஆஸ்திரேலிய வீரர்கள் நல்ல பார்மில், டச்சில் இருக்கிறார்கள் என்று கூற முடியவில்லை என்கிறார் ஆடம் கில்கிறிஸ்ட்.

ஆடம் கில்கிறிஸ்ட் மேலும் கூறும்போது, “ஸ்மித், லபுஷேன் ஆகிய பேட்டிங் ஸ்டார்களோடு 3 வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. இந்தியாவுடனான தொடருக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது, ஏன் 5 வீரர்களை அனுப்பி விட்டு சொத்தை அணியை களமிறக்க வேண்டும்?

இந்தியாவைப் பாருங்கள். டெஸ்ட் அணி ஏற்கெனவே இங்கு வந்துள்ளது. இதோடு இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதோடு தென் ஆப்பிரிக்காவிலி டி20 தொடருக்கு தனித்த ஒரு அணி விளையாடுகிறது. 3 அணிகளை எப்போதும் தயாராக வைத்துள்ளனர். 45 - 50 வீரர்கள் எப்போதும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராக இருக்கின்றனர்.

ஆகவே அங்கு திறமையையும் புதிய திறன்களையும் ஈர்க்கும் விதமாகவும் குறைபாடு ஏற்படும் போது மாற்று வீரர்களுக்கு பஞ்சமேற்படாமலும் வைத்துள்ளனர். இது இந்த டைட் ஷெட்யூலில் அனைத்து அணிகளாலும் செய்ய முடியாதது. நிறைய டி20 லீகுகள் நடைபெறுவதும் சூழ்நிலையை இன்னும் சிக்கலாக்குகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x