Last Updated : 14 Jun, 2018 09:45 AM

 

Published : 14 Jun 2018 09:45 AM
Last Updated : 14 Jun 2018 09:45 AM

கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கால்களின் திருவிழா இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ரஷ்யா - சவுதி அரேபியா மோதல்

 

21

வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. கால்களின் திருவிழாவாக கருதப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டான இந்த உலகக் கோப்பை தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை நடத்தும் 17-வது நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரை ரஷ்யா நடத்துவது இதுவே முதன்முறை. போட்டியை நடத்தும் உரிமை பெற்ற நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாகவே தேர்வாகி உள்ளன. இந்த 32 அணிகளில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்ளிட்ட 20 அணிகள் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் அதற்கு முந்தைய தொடர்களிலும் களமிறங்கி உள்ளன. ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் முதன்முறையாக விளையாட தகுதி பெற்றுள்ளன. இதேபோல் பெரு அணி 36 வருடங்களுக்குப் பிறகும், எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகும், மொராக்கோ 20 ஆண்டுகளுக்கு பிறகும், செனகல் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகும் களமிறங்குகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள 20 உலகக் கோப்பை தொடர்களில் பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி அணிகள் தலா 4 முறை பட்டம் வென்றுள்ளது. இதில் ஜெர்மனி அணி 4 முறை 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ரஷ்ய உலகக் கோப்பை திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. தொடக்க நாளான இன்று மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யா, சவுதி அரேபியாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்த மைதானத்தில் 81 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.

முன்னதாக கண்கவர் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடன கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் நட்சத்திரங்கள் உட்பட 500 பேர் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். இங்கிலாந்தின் பிரபல பாடகர் ராபியே வில்லியம்ஸ், ரஷ்ய இசைக் கலைஞர் அய்டா கரிபுல்லினா மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த ரொனால்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கலை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை

உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்காக ரஷ்யா ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் அதிகம். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.257 கோடியை தட்டிச் செல்லும். உலகக் கோப்பை தொடரை சுமார் 300 கோடி பேர் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நேரடி ஆடுகள பார்வையாளர்களாக 30 லட்சம் பேர் இருக்கக்கூடும். மேலும் நேரடி வெளிநாட்டு பார்வையாளர்கள் 10 லட்சம் பேர்ரஷ்யாவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்புள்ள அணிகள்

இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை கருதப்படுகின்றன. இதில் ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்குகிறது. இம்முறை கோப்பையை தக்கவைத்து சாதனை படைக்கும் முனைப்பில் அந்த அணி தீவிரமாக உள்ளது. கடைசியாக கோப்பையை தக்க வைத்த சாதனையை பிரேசில் அணி கடந்த 56 வருடங்களுக்கு முன் நிகழ்த்தியிருந்தது.

இதேபோல் அர்ஜென்டினா அணிக்கு இம்முறையாவது மகுடம் சூட்டி விட வேண்டும் என்பதில் அதி தீவிரமாக உள்ளார் அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி. 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது, அதன் பின்னர் 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் வீழ்ந்தது என தொடர்ச்சியாக 3 பெரிய தொடர்களில் தோல்வியடைந்து காயம்பட்டுள்ள அர்ஜென்டினா அணிக்கு அருமருந்ததாக கோப்பையை வென்று கொடுக்க மீண்டும் ஒருமுறை தன்னை பட்டைத் தீட்டிக் கொண்டுள்ளார் மெஸ்ஸி. இந்தத் தொடர் அநேகமாக மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும்.

2014 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் சொந்த மண்ணில் 7-1 என்ற கோல் கணக்கில் அவமானகரமான வகையில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்த பிரேசில் அணியும் பட்டம் வெல்வதில் முனைப்பு காட்டக்கூடும். நெய்மர் முழு உடல் தகுதியுடன் அணிக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு அசுர பலமாக உள்ளது.

1998-ல் சொந்த நாட்டில் நடந்த உலகக் கோப்பையில் பட்டம் வென்ற பிரான்ஸ் மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் ரஷ்யா வந்துள்ளது. நட்சத்திர வீரர்கள் பால் போக்பா, கைலியன் மாப்பே, கிரீஸ்மேன் ஆகியோர் அணியில் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. இந்த அணிகளுடன் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இங்கிலாந்தின் ஹாரி கேன், குரோஷியாவின் கவானி, லூயிஸ் சுவாரெஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றனர்.

பயிற்சியாளர் நீக்கம்

8 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் உற்சாகத்தில் ஸ்பெயின் அணி களம்புகுந்துள்ளது. நட்சத்திர வீரர்கள் ஆந்த்ரே இனியெஸ்டா, மார்க்கோ அசென்சியோ, சால் நிகுஸ், செர்ஜியோ புஸ்குட்ஸ், டேவிட் சில்வா போன்றோருடன் பலமிகுந்த அணியாக களம் காண்கிறது ஸ்பெயின். தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாமல் முன்னேறி அசத்தியது ஸ்பெயின். போட்டி தொடங்க ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபேடெகு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரியல் மாட்ரிட் அணியில் ஜூலன் இணைந்ததால் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய பயிற்சியாளர் பெர்னாண்டோ ஹியரோவுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் அணி இருக்கிறது.

வடஅமெரிக்காவில் 2026-ல் உலகக்கோப்பை

21-வது உலகக் கோப்பை தொடர் ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது. அடுத்த உலகக் கோப்பை தொடரை 2022-ம் ஆண்டு கத்தார் நாடு நடத்துகிறது. இந்நிலையில் 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று மாஸ்கோவில் நடைபெற்ற ஃபிபா மாநாட்டின் போது நடந்தது. இதில் வட அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக 134 வாக்குகள் பெற்று உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது.

மொராக்கோ நாட்டுக்கு வெறும் 65 வாக்குகளே கிடைத்தது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வடஅமெரிக்கா உலகக் கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. கடைசியாக 1994-ல் உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா நடத்தியிருந்தது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x