Published : 09 Nov 2024 07:10 AM
Last Updated : 09 Nov 2024 07:10 AM
மும்பை: 8 அணிகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் வரைவு அட்டவணை கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதில் 2025-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9 வரை போட்டிகள் நடைபெறும் எனவும் போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அணி பங்கேற்கும் 3 ஆட்டங்களும் லாகூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, பிசிசிஐ தனது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளது, அதே வேளையில் இந்திய அணியின் அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், “இதுதான் எங்களது நிலைப்பாடு, இதை மாற்றிக் கொள்வதற்கான எந்த காரணமும் இல்லை. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதிள்ளோம். அதில் இந்திய அணியின் ஆட்டங்களை துபாயில் நடத்துமாறு கேட்டுள்ளோம்” என்றனர். இருப்பினும், இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்வதை இதுவரை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT