Published : 09 Nov 2024 06:45 AM
Last Updated : 09 Nov 2024 06:45 AM
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் 11 வருட ஐஎஸ்எல் வரலாற்றில் 1000-வது ஆட்டமாக அமைந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்த ஐஎஸ்எல் வரலாற்றில் (நவம்பர் 7, 2024 அன்று நிலவரப்படி) 998 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில், 2,791 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 சீசன்களிலும் 10 இறுதிப் போட்டிகள், 6 வெவ்வேறு பிளே ஆஃப் வெற்றியாளர்கள், 4 வெவ்வேறு ஷீல்டு வெற்றியாளர்கள் (லீக் போட்டியை முதலிடத்துடன் முடிப்பவர்கள்) ஆகியோரை ஐஎஸ்எல் தொடர் கடந்து வந்துள்ளது. தற்போது ஐஎஸ்எல் தொடரில் 1000-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோது உள்ள ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மும்பை சிட்டி எஃப்சி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி, மும்பை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஐஎஸ்எல் லீக்கில் இரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. மும்பை சிட்டி எஃப்சி 11 வெற்றியையும், சென்னையின் எஃப்சி 6 வெற்றியையும் பதிவு செய்துள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT