Published : 08 Nov 2024 04:00 PM
Last Updated : 08 Nov 2024 04:00 PM

‘விடாமுயற்சி கொண்டவர்’ - இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யஷ் தயாள் குறித்து ராபின் உத்தப்பா

சென்னை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் இளம் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள். இந்நிலையில், அவர் விடாமுயற்சி கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நடத்திய மீடியா ரவுண்ட் டேபிள் நிகழ்வில் வல்லுநராக உத்தப்பா பங்கேற்றார். அதில் அவர் தெரிவித்தது, “ஐபிஎல் 2023-ல் யஷ் தயாள் பந்து வீச்சை ரிங்கு சிங் விளாசி இருந்தார். அதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணி அவருக்கு அந்த சீசனில் நம்பிக்கை தரும் வகையில் உறுதுணையாக நின்றது என நான் கருதுகிறேன். அப்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அவருக்கு நம்பிக்கை தந்தனர், ஆதரவாக இருந்தனர்.

அந்த மாதிரியான சூழல் நிச்சயம் ஒரு வீரரின் நம்பிக்கையை தகர்க்கும். ஆனால், யஷ் தயாள் விடாமுயற்சியினால் அதனை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இடது கை பந்து வீச்சாளராக கடந்த 18 மாதங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக செயல்படுவார். அவரது கதை பலருக்கும் உத்வேகம் தரும் வகையில் உள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டார். பெங்களூரு மைதானத்தில் பந்து வீசுவது சவாலான காரியம். அழுத்தம் அதிகம் இருக்கும். அதை திறம்பட அவர் கையாண்டார். அதனால் தான் ஆர்சிபி அவரை தக்கவைத்துள்ளது என நான் நினைக்கிறேன்” என்றார்.

தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ரமன்தீப் சிங், விஜய்குமார் வைஷாக் போன்ற இளம் வீரர்களும் இந்த முறை ஆடும் லெவனில் வாய்ப்பு பெறலாம் என உத்தப்பா தெரிவித்தார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x