Published : 08 Nov 2024 01:13 PM
Last Updated : 08 Nov 2024 01:13 PM
அடிலெய்டில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்த பாகிஸ்தான் அற்புதமான வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை 35 ஓவர்களில் 163 ரன்களுக்குச் சுருட்டியது.
இதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் இரண்டாவது முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கைக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டினால் கடந்த மெல்போர்ன் போட்டியில் நெருக்கமாகத் தோற்றதற்குப் பதிலடி கொடுத்து தொடரில் சமநிலையை பாகிஸ்தான் எய்த முடியும்.
பாகிஸ்தான் கேப்டனும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான், 6 கேட்ச்களை எடுத்து ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், டி காக், சர்பராஸ் அகமது உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கூடுதலாக ஒரு கேட்சைப் பிடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்தவர் என்ற புதிய விக்கெட் கீப்பிங் உலக சாதனை புரிந்திருப்பார் ரிஸ்வான்.
அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், ஆடம் ஜாம்பா கொடுத்த கேட்சை நழுவ விட்டதால் உலக சாதனை வாய்ப்பைக் கோட்டை விட்டார் ரிஸ்வான்.
ஆடம் கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் 4 முறை ஒரு இன்னிங்ஸில் 6 கேட்ச்களைப் பிடித்து சாதனையைத் தன் பக்கம் வைத்துள்ளார். பாகிஸ்தானின் சர்பராஸ் அகமது ஒரு முறை 6 கேட்ச்களைப் பிடித்துள்ளார், இப்போது ரிஸ்வான் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
ரிஸ்வான் அந்த உலக சாதனை கேட்சைக் கோட்டை விட்டது மட்டுமல்ல பாகிஸ்தான் மேலும் சில கேட்ச்களை விட்டது. அதையெல்லாம் பிடித்திருந்தால் நிச்சயம் 163 ரன்கள் கூட ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்காது.
ரிஸ்வான் தன் படையை சரியாக வழிநடத்தினார், பந்து வீச்சு மாற்றம், டாஸில் அவர்களை முதலில் பேட் செய்ய அழைத்தது, கள வியூகம் எல்லாம் ஒரு தேர்ந்த கேப்டனாக அவரைக் காட்டுகிறது. ஆனால், கேட்ச்களை விட்டால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நோய்க்கூறு.
மேத்யூ ஷார்ட், மெக்குர்க் ஆகியோரை ஷாஹின் ஷா அஃப்ரிடி வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித்தை 35 ரன்களில் ஹஸ்னைன் காலி செய்ய, இங்லிஸ், லபுஷேன், ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல் பாட் கமின்ஸ் என்று வரிசையாக மிடில் ஓவர்களில் ஹாரிஸ் ராவுஃப் மிடில் ஆர்டரைக் காலி செய்து 8 ஓவர்கள் 29 ரன்கள் 5 விக்கெட் என்று அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஷாஹின் அஃப்ரீடி 8 ஓவர்கள் 26 ரன்களுக்கு 3 விக்கெட்.
ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT