Published : 08 Nov 2024 08:33 AM
Last Updated : 08 Nov 2024 08:33 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி: உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்

அர்ஜுன் எரிகைசி

சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 3-வது நாளான நேற்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

மாஸ்டர்ஸ் பிரிவில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அமீன்தபதாபேயி 38-வது நகர்த்தலின்போது வெற்றியை வசப்படுத்தினார். 2-வது போர்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி சகநாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

3-வது போர்டில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய லெவோன் அரோனியன் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 4-வது போர்டில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, செர்பியாவின் அலெக்ஸி சரானாவை சந்தித்தார். கருப்பு காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 37-வது காய் நகர்த்தலின்போது வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் லைவ் ரேட்டிங்கில் அர்ஜுன் எரிகைசி 2805.8 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 3 சுற்றுகளின் முடிவில் அமீன் தபதாபேயி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். லெவோன் அரோனியன் 2 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் 1.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பர்ஹாம் மக்சூட்லூ 1 புள்ளியுடன் 6-வது இடத்திலும், அலெக்ஸி சரானா 0.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், விதித் குஜராத்தி 0.5 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் 3-வது நாளான நேற்று 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் போர்டில் ரவுனக் சத்வானி, லியோன் மெண்டோன்காவுடன் மோதினார். இந்த ஆட்டம் 51-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் ஆர்.வைஷாலி, பிரனேஷுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில்கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி 46-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.

3-வது போர்டில் கார்த்திகேயன் முரளி, பிரணவை எதிர்கொண்டார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரணவ் 69-வது காய் நகர்த்தலின் போது வெற்றி கண்டார். இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது. 4-வது போர்டில் ஹரிகாதுரோணவல்லி, அபிமன்யு புராணிக்கை சந்தித்தார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய ஹரிகா துரோணவல்லி 51-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஹரிகா இந்த டிராவின் மூலம் தனது புள்ளி கணக்கை தொடங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x