Published : 27 Jun 2018 04:09 PM
Last Updated : 27 Jun 2018 04:09 PM
பிரிட்ஜ்டவுனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்மால் தலைமையிலான இலங்கை அணி.
இதன் மூலம் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் டெஸ்டில் வென்ற முதல் ஆசிய நாடானது இலங்கை.
இந்த போட்டியில் 2-வது இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் கேட்ச்பிடிக்க முயன்று குஷால் பெரேரா, விளம்பரப்பலகை மீது மார்பில் காயமுற்றார். இதனால், ஸ்டிரெச்சரில் வைத்துத் தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதனால் பெரேரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தநிலையில், காயத்தைப் பொருட்படுத்தாமல், விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு இலங்கை அணி பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. முதல் டெஸ்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் போட்டியில் வென்றது. 2-வது போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 204 ரன்களுக்கும், இலங்கை அணி 154 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.
54 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லக்மால், ரஜிதா தலா 3 விக்கெட்டுகளயும், பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் 4-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி விளையாடியது. ஹோல்டரின் வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், இலங்கை அணி 81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது.
குஷால் பெரேரா ஒரு ரன்னிலும், மென்டிஸ் (25) ஆகியோர் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு 63 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
4-வது நாள் ஆட்டத்தை நேற்றுத் தொடர்ந்தனர். மென்டிஸ் கூடுதலாக ரன்கள் ஏதும் சேர்க்காமல் 25ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தில்ரூபன் பெரேரா, குஷால் பெரேராவுடன் இணைந்து இருவரும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
குஷால் பெரேரா 23 ரன்களிலும், தில்ரூபன் பெரரேரா 28 ரன்களிலும இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, மேற்கிந்தியத்தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ஹோல்டர் 5விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ஹோல்டரும், தொடர் நாயகனாக ஷேந் டோவ்ரிச்சும் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT