Last Updated : 21 Aug, 2014 10:00 AM

 

Published : 21 Aug 2014 10:00 AM
Last Updated : 21 Aug 2014 10:00 AM

ஜடேஜா என்னும் புதிர்

தனிப்பட்ட சிலரின் மோசமான ஆட்டம் ஒருபுறம் இருக்க, அணித் தேர்வு குறித்த பிரச்சினைகளும் இங்கிலாந்தில் இந்தியாவின் நிலையை மேலும் கடினமாக்கிவிட்டன. குறிப்பாகப் பந்து வீச்சாளர்களின் தேர்வில் இந்தியா நிறையவே சொதப்பியது. முரளி விஜய், ஷிகர் தவன் அல்லது கௌதம் கம்பீர் எனத் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவர், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகிய மூவர் கொண்ட இடை நிலை வரிசை. அடுத்து மகேந்திர சிங் தோனி. இந்த ஆறு பேரில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

மீதி உள்ள ஐவரில் நால்வர் பந்து வீச்சாளர்களாக இருக்க வேண்டும். வேகப் பந்துக்குச் சாதகமான களங்களில் மூன்று வேகப் பந்து வீச்சாளர்களும் ஒரு சுழலரும் இருப்பது வழக்கம். வேகப் பந்து வீச்சுக்குப் பேர்போன அணிகள்கூட ஒரு சுழலருக்கு எப்படியும் அணியில் இடம் தருகின்றன.

ஆனால் இந்திய அணியிலோ முறையான சுழல் பந்து வீச்சாளர் முதல் மூன்று போட்டிகளில் இடம்பெறவில்லை. முதல் போட்டியில் நான்கு வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றார்கள். மீதியுள்ள ஒரு இடத்தில் சுழல் பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். இதன் மூலம் ஏழு மட்டையாளர்கள், ஐந்து பந்து வீச்சாளர்கள் இருப்பதாக அணி தன்னம்பிக்கை கொள்ளலாம்.

பயனற்ற ஆல்ரவுண்டர்கள்

ஆனால் இது பலித்ததா? இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் முதல் இரு ஆட்டங்களில் ஓரளவு நன்றாகவே வீசினார்கள். நான்காவது வேகப் பந்து வீச்சாளராகக் களம் இறங்கிய ஸ்டூவர்ட் பின்னி ஸ்விங் பந்துகளை வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது வீச்சில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

முதல் இன்னிங்க்ஸில் பத்து ஓவர்கள் மட்டுமே வீசினார். ஆனால் மட்டை ஆட்டத்தில் நேர்த்தியையும் டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறையையும் காட்டினார். ரவீந்திர ஜடேஜாவின் சுழல் எந்த மட்டையாளரையும் தொந்தரவு செய்யவில்லை. அவரும் மட்டை ஆட்டத்தில் தன் திறமையைக் காட்டினார். இருவரும் அடுத்த போட்டியிலும் இடம் பெற்றார்கள்.

ஆக, இந்திய அணியில் இரண்டு ஆல் ரவுண்டர்கள். இருவருமே பந்து வீச்சில் அதிகப் பயன் அற்றவர்கள் எனத் தெரிந்தே அணியில் சேர்க்கப்பட்டார்கள். இந்தியா 8 மட்டையாளர்கள், 3 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இது வெற்றி பெறுவதற்கான வியூகமா என்பதை அணித் தலைமைதான் விளக்க வேண்டும். எட்டு மட்டையாளர்களும் சேர்ந்து ஒரு முறைதான் 400 ரன்னைக் கடந்திருக்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் ஒரே ஒரு போட்டியில்தான் 20 விக்கெட்களை எடுத்திருக்கிறார்கள்.

ஜடேஜா மீது அதீத நம்பிக்கை

இதையெல்லாம் மீறி விஜய், ரஹானே, ஜடேஜா, குமார் ஆகியோரின் மட்டை ஆட்டத்தினாலும் ஷர்மாவின் வீச்சினாலும் இந்தியா லார்ட்ஸ் டெஸ்டை வென்றுவிட்டது. பின்னி சரியாக ஆடவில்லை. அவர் உடனே நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டார். காயம் பட்ட இஷாந்தின் இடத்தில் பங்கஜ் சிங் சேர்க்கப்பட்டார்.

பங்கஜ் சிங்கின் முயற்சிகள் நழுவ விடப்பட்ட கேட்சுகளால் வீணாயின. ரோஹித்தின் மட்டையாட்டம் பொறுப்பற்றதாக அமைந்தது. ஜடேஜாவுக்கு இரண்டு இன்னிங்ஸிலுமாக ஐந்து விக்கெட்கள் விழுந்தாலும் அவரது சுழலுக்கு யாரும் திணறியதாகத் தெரியவில்லை. அவரது மட்டை வீச்சு கை கொடுத்தது.

ஆனால் ஜடேஜாவின் மட்டை வீச்சு அதன் பிறகு எடுபடவில்லை. அது ஒரு இன்னிங்ஸ் அதிசயமாகவே தங்கிவிட்டது. முறையான சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நான்காவது போட்டியில்தான் இடம் கிடைத்தது. அவர் இரண்டு இன்னிங்ஸிலும் மட்டையில்தான் பிரகாசித்தார். ஐந்தாவது போட்டியில்தான் ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இப்படி ஜடேஜாவின் மேல் அதீத நம்பிக்கை வைத்ததற்குத் தர்க்க ரீதியான எந்தக் காரணத்தையும் கற்பித்துக்கொள்ள முடியவில்லை.

சர்ச்சைக்கு முக்கியத்துவம்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் வேகப் பந்து வீச்சுதான் வலுவாக இருக்க வேண்டும். ஒரு ஆல் ரவுண்டரைச் சேர்க்க வேண்டுமென்றால் வேகப் பந்து வீசக்கூடிய ஆல் ரவுண்டர் இருந்தால் அவருக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர் பகுதி நேரப் பந்து வீச்சாளராகப் பயன்படுத்தப்பட்டாலும் களத்துக்கு ஏற்ற ஆயுதமாக அவரால் விளங்க முடியும்.

எனவே பின்னியையே ஆல் ரவுண்டராகத் தேர்ந்தெடுத்து அஸ்வினைப் பிரதான சுழலராகச் சேர்த்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஐந்து போட்டிகளில் ஆடியிருந்தால் இந்தியாவின் பந்து வீச்சும் மட்டை வீச்சும் பலப்பட்டிருக்கும். ஜடேஜாவைக் கைவிட அணித் தலைமைக்கு மனமில்லாமல் போனது இந்தியாவைப் பாதித்த காரணிகளுள் ஒன்று என்று சொல்லலாம்.

இவை ஒரு புறம் இருக்க, தோனியின் விக்கெட் கீப்பிங் திறன், ஜடேஜா – ஆண்டர்சன் சர்ச்சையில் அவர் நடந்துகொண்ட விதம் ஆகியவையும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. 2011-ல்பெற்ற தோல்வியும் இதே அளவு மோசமானதுதான் என்று அவர் சொன்னதும் ஐ.பி.எல். ஆட்டங்களைப் பற்றிக் கேட்டால் அவருக்குப் பதற்றம் வருவதும் ஆரோக்கியமான அறிகுறிகள் அல்ல. இந்த சிக்கல்களையெல்லாம் தாண்டி இந்திய டெஸ்டின் எதிர்காலத்தை மீட்டெடுப்பது எப்படி?

(அலசல் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x