Published : 04 Nov 2024 08:55 AM
Last Updated : 04 Nov 2024 08:55 AM
மும்பை: நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
“சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைவது சாதாரண விஷயமல்ல. இந்த தொடரில் நான் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தொடரை முழுமையாக இழந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என்பதே உண்மை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரும் எங்களுக்கு சவாலான விஷயம்தான். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம்” என தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
டாம் லேதம், நியூஸி. அணி கேப்டன்: இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மிகவும் பரவசமாக உள்ளது. ஓர் அணியாக இங்கு மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னர், இலங்கையில் டெஸ்ட் தொடரை இழந்தோம். அப்போது நாங்கள் மோசமாக விமர்சிக்கப்பட்டோம். தற்போது தோல்விப் பாதையிலிருந்து மீண்டு வெற்றி கண்டுள்ளோம். இந்த 3 போட்டிகளிலும் எங்கள் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதைப் போலவே பந்து வீச்சாளர்களும் அருமையாக பந்துவீசினர் என அவர் தெரிவித்தார்.
‘இந்திய ஆடுகள சூழலை நியூஸி. வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தினர்’: ஹர்பஜன் - இந்திய ஆடுகள சூழலை நியூஸிலாந்து வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தினர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தன. குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை நம்பி களமிறங்கியதே. இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. நாம் விரித்த வலைக்குள் நாமே சிக்கிக் கொண்டோம். இந்திய ஆடுகள சூழலை, நியூஸிலாந்து வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment