Published : 09 Jun 2018 06:24 PM
Last Updated : 09 Jun 2018 06:24 PM

எங்களிடம் இந்திய அணியைக் காட்டிலும் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்: ஆப்கான் கேப்டன் நம்பிக்கை

டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழையும் குழந்தையான ஆப்கான் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது. குழந்தையைத்தான் அனைவரும் சீண்டிப்பார்த்திருக்கிறோம், ஆனால் குழந்தை பெரியவர்களைச் சீண்டுவதை இப்போது ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் மூலம் பார்க்கிறோம்.

டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ள ஜடேஜா, அஸ்வினை விடவும் தங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர் என்கிறார் ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய். இவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“உலகிற்கே தெரியும் எங்களிடம் ரஷீத் கான், முஜீப், மொகமட் நபி, ரஹ்மத், ஜகீர் கான் ஆகியோர் உள்ளனர் என்று. ஆப்கான் அணியின் சிறப்பு என்னவெனில் வரும் இளம் வீரர்கள் எல்லாருமே கிளாஸ் ஸ்பின்னர்களாக உள்ளனர். ஏனெனில் அனைவரும் ரஷீத்கானைப் பார்க்கின்றனர், முஜீப் உர் ரஹ்மானைப் பார்க்கின்றனர். நபியைப் பார்க்கின்றனர். எனவே எங்கள் ஸ்பின் துறை வலுவாக உள்ளது.

என் கருத்தின் படி எங்களிடம் இந்திய அணியக் காட்டிலும் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர் என்று கூறுவேன்” என்றார்.

 

விக்கெட் கீப்பர் ஷஜாத் கூறும்போது, “ஒரு அதிர்ச்சி நிச்சயம் நடக்கும். எங்கள் ஸ்பின்னர்கள் எப்படி வீசுகின்றனர் என்பது உங்களுக்கே தெரியும். அயர்லாந்து தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை அச்சுறுத்தவில்லையா?

ஆனால் நாங்கள் இங்கு வந்து ஆடுகிறோம், அதுவும் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடும் அணிக்கு எதிராக ஸ்பின்னர்களையே ஆயுதமாக்கத் தயாராகி வருகிறோம். நிச்சயம் அது ஒரு நல்ல டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கூட இப்போது ரஷீத் கான் சிறந்த ஸ்பின்னராகத் திகழ்கிறார். எந்த ஒரு உலக பவுலரையும் நீங்கள் கூறுங்கள், நான் கூறுவேன் அவரை விட ரஷீத் கான் சிறந்த வீச்சாளர் என்று. அல்லது அவருக்குச் சமமானவர் ரஷீத் என்று கூறுவேன்.

இந்தியாவை விட சிறந்த ஸ்பின்னர்களா? - தெரியவில்லை என்கிறார் கோச் சிம்மன்ஸ்:

இந்திய ஸ்பின்னர்களை விடச் சிறந்ததா என்பது தெரியவில்லை, ஆனால் ரஷீத் கான் இப்போது வேறு ஒரு உச்சத்தில் உள்ளார். அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு புதிய பிராந்தியம். ஆனாலும் அதனை அவர் வெல்வார். ஆனால் முதல் போட்டியிலேயே வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x