Published : 03 Nov 2024 08:38 AM
Last Updated : 03 Nov 2024 08:38 AM
மும்பை: நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரது அரை சதம் காரணமாக 263 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82, வில் யங் 71 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 18, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, முகமது சிராஜ் 0, விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 31, ரிஷப் பந்த் ஒரு ரன் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில் 66 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் தனது 7-வது அரை சதத்தை கடந்தார்.
மறுபுறம் மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் தனது 13-வது அரை சதத்தை அடித்தார். 5-வதுவிக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை இஷ் சோதி பிரித்தார். ரிஷப் பந்த்59 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் இஷ் சோதிபந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 14 ரன்களில் கிளென் பிலிப்ஸ் பந்தில் சிலிப் திசையில் டேரில் மிட்செல்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார். சர்பராஸ் கான் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்தில் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டடெல்லிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷுப்மன் கில் 146 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தில் தடுப்பாட்டம் மேற்கொண்ட போது பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற டேரில் மிட்செல்லிடம் கேட்ச் ஆனது.
அப்போது ஸ்கோர் 227 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், அஜாஸ் படேல் வீசிய 56-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 239 ரன்கள் எடுத்து முன்னிலை பெற தொடங்கியது. சிறிது நேரத்தில் அஜாஸ் படேல் பந்தில் அஸ்வின் (6) நடையை கட்டினார். கடைசி வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரச்சின் ரவீந்திரா, டாம் பிளண்டெல் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தனது கடைசி 6 விக்கெட்களை 83 ரன்களுக்கு தாரைவார்த்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
கேப்டன் டாம் லேதம் ஒரு ரன்னில் ஆகாஷ்தீப் பந்தில் போல்டானார். சற்று நிதானமாக விளையாடிய டேவன் கான்வே 47 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் சிலிப் திசையில் நின்ற ஷுப்மன் கில்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா அவசர கதியில் விளையாட முயன்று 4 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.
இதன் பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல்44 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தைசிக்ஸருக்கு விளாச முயன்ற போது அஸ்வினின் அபாரமான கேட்ச் காரணமாக வெளியேறினார். இதைத் தொடர்ந்து டாம் பிளண்டெல் 4 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 14 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதை தொடர்ந்து இஷ் சோதி 8 ரன்களில் ஜடேஜா பந்தில் நடையை கட்டினார். தனது 8-வது அரை சதத்தை கடந்த வில் யங் 100 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். இதை தொடர்ந்து மேட் ஹென்றி 10 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 43.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
அஜாஸ் படேல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4, அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து அணி கைவசம் ஒரு விக்கெட் மீதமிருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT