Published : 13 Aug 2014 10:00 AM
Last Updated : 13 Aug 2014 10:00 AM

குளோபல் கால்பந்து போட்டி ஆக.15-ல் தொடக்கம்

சென்னை யுனைடெட் வெட்டிரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் குளோபல் வெட்டிரன்ஸ் கால்பந்து போட்டி வரும் 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இது தொடர்பாக யுனைடெட் வெட்டிரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் காந்தி கூறியதாவது:

குளோபல் வெட்டிரன்ஸ் கால்பந்து போட்டி 2-வது ஆண்டாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு முதல்முறையாக மலேசியாவில் நடத்தப்பட்டது. அதில் இந்திய அணி சாம்பியன் ஆனது. 2-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டி சென்னை நேரு மைதானத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறவுள்ளது. 16-ம் தேதி மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் டிஐஜி (சிபிசிஐடி, எஸ்.ஐ.டி) ஜான் நிக்கல்சன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்குகிறார் என்றார்.

6 அணிகள், இரு பிரிவு

இந்தியாவைச் சேர்ந்த யுனைடெட் வெட்டிரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், மலேசியாவைச் சேர்ந்த லேங்ஸ்டார் வெட்டிரன்ஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்திய அசோசியேஷன் கால்பந்து கிளப், மாலத்தீவைச் சேர்ந்த சாக்கர் வெட்டிரன்ஸ் அசோசியேஷன், சிங்கப்பூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.டி. இண்டர்நேஷனல், புருனேயைச் சேர்ந்த வெட்டிரன்ஸ் எப்.ஏ. ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் ஏ, பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, இந்தோனேசியா, புருனே ஆகிய அணிகளும், பி பிரிவில் சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி இறுதிச்சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இறுதிப் போட்டி 16ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு காட்சிப் போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி 30+10+30 என்ற நேர அடிப்படையில் நடைபெறவிருக்கிறது.

மீஞ்சூர் பள்ளி அணிக்கு டிரைவே நிறுவனம் ஸ்பான்சர்

யுனைடெட் வெட்டிரன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சமீபத்தில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து 12 அணிகள், திண்டுக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவற்றில் இருந்து தலா ஓர் அணி என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் மீஞ்சூர் ஏ.என்.எம். உயர்நிலைப் பள்ளி அணி சாம்பியன் ஆனது.

இதையடுத்து அந்த அணியை டிரைவே பார்வார்டிங் அண்ட் கிளீனிங் ஏஜென்சி 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த பள்ளி அணிக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் டிரைவே நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x