Published : 01 Nov 2024 12:42 PM
Last Updated : 01 Nov 2024 12:42 PM

‘தனிப்பட்ட சாதனைகளை விட அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைத்துள்ளோம்’ - சஞ்சீவ் கோயங்கா

சஞ்சீவ் கோயங்கா

மும்பை: தனிப்பட்ட சாதனைகளை விட அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைத்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு 10 ஐபிஎல் அணிகளும் கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் அதிகபட்சம் ஆறு வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. இதற்கான கெடு தேதி அக்டோபர் 31 என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கெடு தேதி நேற்றைய தினம் நிறைவடைந்த காரணத்தால் 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்த வீரர்களின் விவரங்களை வெளியிட்டது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மொஹ்சின் கான் (ரூ. 4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது அது பேசு பொருளானது. அதோடு அடுத்த சீசனில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. ‘ராகுல், லக்னோ அணியின் அங்கம்’ என கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, தங்கள் தனிப்பட்ட சாதனைகளை காட்டிலும் அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைக்கலாம் என்ற மைண்ட் செட்டில் சென்றுள்ளோம்” என சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x