Published : 27 Oct 2024 04:10 AM
Last Updated : 27 Oct 2024 04:10 AM

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 267 ரன்களும், பாகிஸ்தான் 344 ரன்களும் எடுத்தன. 77 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 2, டென் டக்கெட் 12, ஆலி போப் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நோமன் அலி, சஜித் கான் ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 33, ஹாரி புரூக் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேமி ஸ்மித் 3, கஸ் அட்கின்சன் 10, ரேஹான் அகமது 7, ஜேக் லீகச் 10 ரன்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 36 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைம் அயூப் 8 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷான் மசூத் 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்துல்லா ஷபிக் 5ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் விளாசிய சவுத் ஷகீல் ஆட்ட நாயகனாக தேர்வானார். பந்து வீச்சில் 19 விக்கெட்களையும், பேட்டிங்கில் 72 ரன்களும் சேர்த்த சஜித் கான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.

மசூத் தலைமையில் முதல் வெற்றி

பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. அவரது தலைமையில் பாகிஸ்தான் வென்றுள்ள முதல் தொடர் இதுவாகும். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கிலும், வங்கதேசத்திடம் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. தற்போது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

///

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x