Published : 25 Oct 2024 03:05 PM
Last Updated : 25 Oct 2024 03:05 PM

IND vs NZ புனே டெஸ்ட்: மிட்செல் சான்ட்னர் சுழலில் சரிந்த வீரர்கள் - 156 ரன்களில் சுருண்ட இந்தியா! 

மிட்செல் சான்ட்னர் பந்தில் விக்கெட்டான விராட் கோலி | படம்: பாக்யா பிரகாஷ்

புனே: வீரர்கள் நிலைக்காமல் அவுட்டாகி வெளியேறியதன் விளையாக நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று (அக்.24) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்தது ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய இந்திய அணியில் ரோகித் டக் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களைச் சேர்த்தது இந்தியா.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா 30 ரன்களைச் சேர்த்தனர். இவர்களை தவிர்த்து, விராட் கோலி 1 ரன்னிலும், ரிஷப் பந்து 18 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் 11 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும் அவுட்டாக இந்திய அணியின் நிலைமை மோசமானது. ஜடேஜா மட்டும் தாக்குப்பிடித்து 38 ரன்களைச் சேர்த்தார். ஆகாஷ் தீப் 6 ரன்களும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாக, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி, நியூஸிலாந்தைவிட 103 ரன்கள் பின்தங்கியது. நியூஸிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், க்ளன் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x