Published : 25 Oct 2024 11:09 AM
Last Updated : 25 Oct 2024 11:09 AM

அஸ்வினுக்குத் திரும்பாத பந்துகள் வாஷிங்டன் சுந்தருக்குத் திரும்பின!

இந்திய அணியின் தேர்வுக்குழு திடீரென விழித்துக் கொண்டு செயல்பட்டதில் விளைந்த நன்மை வாஷிங்டன் சுந்தரை புனே டெஸ்ட் போட்டிக்குத் திரும்பி அழைத்ததுதான். ஏனெனில், அஸ்வினுக்கு நல்ல பிட்சில் ஸ்பின் ஆகாது கடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியிலேயே தெரிந்து விட்டது.

அஸ்வின் மரபான ஆஃப் ஸ்பின் பவுலிங்கிலிருந்தும் அதற்குரிய பவுலிங் ஆக்‌ஷனிலிருந்தும் வெகுதூரம் விலகி வந்து விட்டார். எனவே நேதன் லயனை விட 25 டெஸ்ட்கள் குறைவாக 530 விக்கெட்டுகள் எடுத்ததற்காக அஸ்வினை நேதன் லயனை விட பெரிய பவுலர் என்று விளிப்பது கிரிக்கெட் அறியாமைகளில் ஒன்றே.

அஸ்வின் பவுலிங் அவர் ஆடிய இந்திய கேப்டன்களின் தற்குறித்தனத்தினால் (தோனி, கோலி) குழிப்பிட்ச்களாகப் போடப்பட்டு எடுக்கப்பட்ட விக்கெட்டுகள் என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ளத் தவறும், மறுக்கும் உண்மை. சுலபமான குழிப்பிட்ச்களில் பந்துகளை திருப்ப அஸ்வின் பெரிய சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால் இப்போதெல்லாம் இந்தியப் பிட்ச்கள் மாறிவருவது வேகப்பந்து வீச்சுக்குச் சாதக மனோபாவம் வந்து விட்டது என்பதனால் அல்ல மாறாக இந்திய பேட்டர்களுக்கு ஸ்பின்னை ஆடும் திறன்கள் போய் விட்டது என்பதால்தான்.

இத்தகைய உண்மையான பிட்ச்களில் அஸ்வினால் பந்தைத் திருப்ப முடியவில்லை என்பது கடந்த சில மாதங்களாக அவரது பவுலிங்கை கூர்ந்து நோக்குபவர்களுக்கு வெட்ட வெளிச்சம். காரணம் ஒன்று அவர் சுலபமான இந்தியக் குழிப்பிட்ச்களில் அதிக சிரமமின்றி, சாதகமான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் அவர் பந்து வீச்சில் தொடர் முயற்சிகள் இல்லாமல் போய் விட்டது. டி20 கிரிக்கெட்டும் ஒருபுறம்.

மேலும் அவர் பவுலிங் ஆக்‌ஷன் மரபான வலது கை ஆஃப் ஸ்பின்னுக்குத் தேவையான இடது தோள் ஷார்ட் ஃபைன் லெக் திசையை நோக்கி இருக்க வேண்டும் என்ற அரிச்சுவடிகளை அவர் தேவையில்லை என்று கைவிட்டு விட்டார். அஸ்வின் பந்துகளில் பந்தை ஃபிளைட் செய்யும் போது ஏற்படும் ‘லூப்’ என்னும் , பேட்டர்களை ஏமாற்றும் ஒரு தன்மை இல்லாமல் போய் விட்டது. ட்ரிஃப்ட், ஆர்க் என்று ஸ்பின்னுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஓசி எல்.பி.டபிள்யூ விக்கெட்டுகளை எடுக்க அவர் முனைவது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

ஓபன் செஸ்ட் ஆக்‌ஷனில் ஆஃப் ஸ்பின் போட்டால் பந்து நிச்சயம் திரும்பாது, அதாவது குழிப்பிட்சாக இருந்தாலே தவிர. ஒரு ஆஃப் ஸ்பின்னர் ரவுண்ட் த விக்கெட் எப்போது வர வேண்டும் என்றால் பந்துகள் பிட்சின் உதவியால் பயங்கரமாக திரும்பும் போது சாமர்த்தியமான பேட்டர்கள் அதைக் கணித்து ஆடாமல் விடும் சாத்தியங்கள் அதிகம். எனவே திருப்புகையைக் கட்டுப்படுத்த ரவுண்ட் த விக்கெட் வருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தெரு கிரிக்கெட் போல் ஓவர் த விக்கெட்டில் 2 பவுண்டரி அடித்து விட்டால் உடனே ரவுண்ட் த விக்கெட் வருகிறார்கள். குறிப்பாக இடது கை பேட்டர்களுக்கு வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் ஓவர் த விக்கெட்டில் வீசும் போதுதான், அதாவது நடுவருக்கு இடது பக்கத்திலிருந்து வீசும்போதுதான் இடது கை பேட்டர்களுக்கு அந்த லெக் ஸ்டம்ப் லைனில் அவர்கள் பார்க்க முடியாத ஒரு இடத்தில் பந்தை பிட்ச் செய்து திருப்ப முடியும். இந்த சாதகப் பலன்களை அஸ்வின் ஓ.சி. எல்.பி. விக்கெட்டுகளுக்காக ரவுண்ட் த விக்கெட்டில் வீசி பறிகொடுத்து வருகிறார்.

கடந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா இந்திய ஸ்பின்னர்களை 13 ஓவர்களில் 111 ரன்கள் அடித்ததாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் இடது கை வீரருக்கு மரபான அச்சுறுத்தலாக விளங்கும் ஆஃப் ஸ்பின் அஸ்வின் பந்துகள் திரும்பவில்லை என்பதுதான்.

நியூஸிலாந்து பேட்டர்கள் கணிப்பில் தவறு: அஸ்வின் நேற்று எடுத்த 3 விக்கெட்டுகளுமே பந்தின் திருப்புகையினால் அல்ல பந்துகள் திரும்பாததால் எடுத்தவைகளே. டாம் லேதம் பந்தை தவறான லைனில் ஆடி எல்.பிஆனார். அது அவர் செய்த தவறினால் விழுந்த விக்கெட்டே தவிர அஸ்வின் அவரை தவறு செய்ய வைத்ததினால் அல்ல.

அதே போல் டெவன் கான்வே ஒன்றுமேயில்லாத பந்தில் ஆட்டமிழந்தார். வில் யங்கும் அதே போல்தான் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே ஏதோ கவனப்பிசகினால் விழ்ந்த விக்கெட்டுகள்தான்.

டர்ன் ஆகாத அஸ்வின் பந்துகள் டர்ன் ஆகும் என்று நினைத்து 3 விக்கெட்டுகளை நியூஸிலாந்து கொடுத்தனர். ஆனால் அஸ்வினுக்கே டர்ன் ஆகவில்லை வாஷிங்டன் சுந்தருக்கு எங்கு டர்ன் ஆகப்போகிறது? என்று நியூஸிலாந்து தப்புக் கணக்குப் போட்டனர்.

டர்ன் ஆகாது என்று நினைத்த பந்துகள் டர்ன் ஆக 7 விக்கெட்டுகளை அவரிடம் கொடுத்தனர் நியூஸிலாந்தினர். டர்ன் ஆகும் என்று நினைத்து டர்ன் ஆகாமல் அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகள் என்றால் டர்ன் ஆகாது என்று நினைத்து ஆடி டர்ன் ஆனதால் வாஷிங்டன் சுந்தருக்கு 7 விக்கெட்டுகள். இது வாஷிங்டன் சுந்தருடைய பந்து வீச்சு முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

நியூஸிலாந்து அணியினர் மரபாகவே ஆஃப் ஸ்பின் பந்து வீச்சுக்குத் திணறுபவர்கள். இராப்பள்ளி பிரசன்னா நியூஸிலாந்தில் அந்தக் குளிரில் பந்தை கிரிப் செய்வதே கடினமான நிலையிலும் கூட 76 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

நல்ல பிட்சில், உதவியில்லாத பிட்ச்களில் முயற்சி செய்து விக்கெட்டுகள் வீழ்த்துவதில்தான் பெருமையே தவிர, திறமையே தவிர குழிப்பிட்ச்களில் போட்டுப் போட்டு வரும் அணிகளையெல்லாம் பயமுறுத்தினால் கடைசியில் முரண் நகையாக நம் பேட்டர்களின் ஸ்பின் ஆடும் திறமையும் போய், ஸ்பின்னர்களின் திறமையும் காணாமல் போகிறது. இப்போது வாஷிங்டன் சுந்தர் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x