Published : 19 Jun 2018 05:33 PM
Last Updated : 19 Jun 2018 05:33 PM
காயத்தினால் அவதியுற்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்து வரும் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தற்போது இலங்கைக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா தொடருக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் இங்கிலாந்து கவுண்டி அணியான ஹாம்ப்ஷயர் அணிக்காக ஆடி வரும் டேல் ஸ்டெய்ன், சோமர்செட் அணிக்கு எதிரான லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஓவர்களில் 80 ரன்கள் விளாசப்பட்டார், இவரது மோசமான பந்து வீச்சினால் 356 ரன்கள் எடுத்த ஹாம்ப்ஷயர் அணி சோமர்செட் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது, சோமர்செட் அணி 360/7 என்று வெற்றி பெற்றது, டேல் ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 80 ரன்கள் விளாசப்பட்டார்.
சோமர்செட் பேட்ஸ்மென்களான மைபர்க் (71), ட்ரீகோ (100) ஹில்ட்ரெத் (56) ஆகியோர் ஸ்டெய்னை புரட்டி எடுத்தனர். ஆனால் சரே அணிக்கு எதிரான முதல்தர கிரிக்கெட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 26 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் யார்க்ஷயர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் ஹாம்ப்ஷயர் 348 ரன்கள் விளாசியது. ஜேம்ஸ் வின்ஸ் 171 ரன்களைக் குவித்தார், தொடர்ந்து ஆடிய யார்க்ஷயர் அணி 241 ரன்களுக்குச் சுருண்டது. இது அரையிறுதிப் போட்டி என்பது வேறு விஷயம். இதில் டேல் ஸ்டெய்ன் 7 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், அந்த ஒரு விக்கெட் யார் தெரியுமா? நம் செடேஸ்வர் புஜாராதான் அது.
புஜாரா 4 பந்துகள் ஆடி டேல் ஸ்டெயின் வீசிய பந்து ஒன்று கூடுதல் பவுன்ஸ் ஆக முதல் ஸ்லிப்பில் ஆடம்ஸ் கையில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இங்கிலாந்து தொடருக்கு முன்பாக டேல் ஸ்டெய்னை அந்த பிட்ச், உள்ளிட்ட சூழ்நிலையில் ஆடுவதற்குக் கிடைத்த வாய்ப்பை புஜாரா சரியாகப் பயன்படுத்தவில்லை, மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் என்றால் பந்தின் மீது மட்டையைத் தொங்க விடும் (கெட்ட) பழக்கம் இன்னும் அவரிடமிருந்து போகவில்லை என்பதற்கு இந்த அவுட் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
மேலும் டேல் ஸ்டெய்ன் ஃபார்முக்காக உடல் தகுதியுடன் போராடி வரும் நிலையில் அவர் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஒருநாள் போட்டியில் ஆட்டமிழ்ந்திருப்பது புஜாராவின் தன்னம்பிக்கைக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT