Published : 13 Jun 2018 07:30 PM
Last Updated : 13 Jun 2018 07:30 PM
அயர்லாந்து சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தன் வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி பாகிஸ்தானை பாடாய்ப்படுத்தியது, இறுதியில் பாகிஸ்தான் போராடி வென்றது, இதனையடுத்து சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கான் அணியின் மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை (வியாழன்) பெங்களூருவில் நம்பர் 1 டெஸ்ட் இந்திய அணியை ஆப்கான் எதிர்கொள்ளும்போது ரசிகர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்திய அணியில் அனைவரும் ஐபிஎல் ஹேங் ஓவரிலிருந்து மீண்டார்களா என்பது தெரியவில்லை, கேப்டன் கோலி இருந்தால் அணியின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவார், அவரும் இல்லை, ரஹானே ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட்ஸ்மெனாக தோல்வியடைந்த வீரர். டெஸ்ட் வேறு, ஐபிஎல் வேறு என்றாலும் தொடர்ந்து 8-10 போட்டிகளில் ஆடி திருப்திகரமாக ஆட முடியாதவருக்கு அவர் மனதிலேயே சந்தேகங்கள் ஏற்படும் அதனால்தான் டி20யாக இருந்தாலும் உள்நாட்டு போட்டியாக இருந்தாலும், வலைப்பயிற்சியாக இருந்தாலும் ஒரு பேட்ஸ்மென் அல்லது பவுலர் தன்னளவில் தன் பார்ம் குறித்து திருப்திகரமாக உணர்வது அவசியம், அந்த மாதிரி ரஹானே உணர்ந்திருப்பாரா என்பதும் சந்தேகமே.
இதே வாதத்தை முரளி விஜய்க்கும் வைக்கலாம், சிஎஸ்கேயில் அவருக்கு வாய்ப்பேயளிக்கவில்லை, தோனி ஐபிஎல் கிரிக்கெட்டை தேசிய நலன்களுக்காகப் பயன்படுத்தப்பார்ப்பவர் அல்ல. அணியில் தினேஷ் கார்த்திக் உற்சாகமாக இருக்கிறார், உமேஷ் யாதவ் உற்சாகமாக இருக்கிறார், மற்றபடி அஸ்வின், ஜடேஜா இருவரில் ஜடேஜா ஐபிஎல்-ல் படுதோல்வி வீர்ர், அஸ்வின், தன் ஆஃப் ஸ்பின்னை மேம்படுத்தும் உத்திகளை விடுத்து லெக் ஸ்பின் வேகப்பந்து வீச்சு வீசட்டுமா, விரல்களில் வீசட்டுமா? என்று பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்போதைக்கு அணியில் ஷிகர் தவண், கே.எல்.ராகுல், கருண் நாயர் போன்ற பேட்ஸ்மென்கள் தன்னம்பிக்கையுடன் திகழ்கின்றனர்.
ஆகவே ஆப்கான் அணியைக் கண்டு லேசாக பயம் கூட இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கலாம். உற்சாகம் என்ற அளவில் ஆப்கன் அணி லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 18-ல் 5-ல் மட்டுமே தோல்வி தழுவியுள்ளனர். மேலும் இந்த 5 நாட்கள் டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில், உதாரணமாக 3ம் நாள் பந்துகள் திரும்பும்போது இந்திய அணிக்கு அபாயம் காத்திருக்கிறது. அதிலும் ரஷீத் கான் போன்ற ஸ்பின்னர்கள் முரளிதரனை வாத்தியாராக கொண்டவர்கள், பிட்ச் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அபாயகரமாக வீசக்கூடியவர்கள், மேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று அந்த அணி ஆடும்போது அழுத்தம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை, மாறாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற ஹோதாவில் இறங்கி சொதப்பினால் அது மன உளைச்சலுக்கே வழிவகுக்கும், ஆகவே இந்தியா எந்த அளவுக்கு இந்த டெஸ்ட்டுக்கு தயாராகியிருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.
மேலும் இந்தியா ஸ்பின் பந்து வீச்சை அபாரமாக ஆடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது, இப்போது பந்துகள் திரும்பும் பிட்சில் இந்திய அணியும் காலியாகிறது, மொயின் அலி, ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர், நேதன் லயன், ரங்கனா ஹெராத் உள்ளிட்டோர் இதனை இந்தியாவுக்கு எதிராக நிரூபித்துள்ளனர். ஆகவே வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களமாக இந்தியா அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம், அல்லது 5 நாட்களும் உடையாத ஒரு மட்டைப் பிட்ச் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.
போராளிகளாகக் களமிறங்குகிறது ஆப்கான் அணி, அதன் உத்வேகத்தையும் ஆற்றலையும், வேகத்தையும் தடுக்கும் அணியாகவே இந்தியா இப்போதைக்குத் தெரிகிறது, ஆதிக்கம் செலுத்தும் அணியாகத் தெரியவில்லை, இருந்தாலும் முதல் நாள் ஆட்டம் முடிந்தவுடன் தான் எதையும் தீர்மானிக்க முடியும்.
எதுஎப்படியிருந்தாலும் இந்த ஒன் - ஆஃப் டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரசியமானதாகவே இருக்கும்.
இந்திய ஸ்பின்னர்களை விட தங்கள் ஸ்பின்னர்கள் சிறப்பானவர்கள் என்று ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் அன்றொரு நாள் பெருமிதம் கொண்டார். அந்தப் பெருமிதத்தை இந்தியா உடைக்குமா என்று பார்க்க வேண்டும். இந்திய அணியில் சேவாக் போன்ற ஒரு தாக்குதல் தொடக்க வீரர் இல்லாதது இது போன்ற ஸ்பின் ஆதிக்க அணியினருக்கு கொஞ்சம் அனுகூலங்களைக் கூட்டுகிறது, மேலும் முன் பின் தெரியாத அணி என்ன செய்வார்கள் என்பதும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை, இந்நிலையில் இந்திய அணிக்குத்தான் சிலபல ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்று நம்பலாம்.
ஆப்கானுக்கு ஒரு பெரிய தலைவலியாக மொகமது ஷமியும் புவனேஷ்வர் குமாரும் இருந்திருப்பார்கள், ஆனால் அவர்கள் இருவரும் அணியில் இல்லை. இஷாந்த், உமேஷ் யாதவ் சில வேளைகளில் வீசும் மார்புயர பவுன்சர்கள் வங்கதேச பேட்ஸ்மென்களுக்குக் கடும் சவாலாக அமையும். அஸ்வினின் புதுரகப் பவுலிங்கும் கொஞ்சம் சவால் ஏற்படுத்தலாம், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் இருந்தால் ரிஸ்ட் ஸ்பின் வலுசேர்க்கும். ஆனால் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. கோலி, புவனேஷ்வர் குமார், ஷமி இல்லாத அணி கொஞ்சம் பலம் குறைந்ததாகவே தெரிகிறது.
இந்திய அணி (உத்தேசம்)
முரளி விஜய்/ஷிகர் தவண், கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.
ஆப்கன் அணி (உத்தேசம்)
மொகமத் ஷஜாத், ஜாவேத் அஹ்மதி, ரஹ்மத் ஷா, அஸ்கர் ஸ்டானிக்சாய் (கேப்டன்), நசீர் ஜமால்/ஹஸ்மத்துல்லா ஷாகிதி, மொகமத் நபி, அஃப்சர் ஸாசாய், ரஷீத் கான், அமீர் ஹம்சா/ஜாகிர் கான், யாமின் அகமத்சாய், வஃபாதார்/முஜீப் உர் ரஹ்மான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT