Published : 30 Jun 2018 11:22 AM
Last Updated : 30 Jun 2018 11:22 AM

யாரைத் தேர்வு செய்வது? யாரை விடுவது? தலைவலிதான்: விராட் கோலி பெருமிதக் கவலை

பரிதாப அயர்லாந்துக்கு எதிராக 2-0 என்று வெற்றி பெற்றதையடுத்து தனக்கு இந்த திறமை வாய்ந்த அணியிலிருந்து 11 ஆடும் வீரர்களைத் தேர்வு செய்யும் ஆரோக்கியத் தலைவலி ஏற்பட்டுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஏதாவது ஒரு ஐபிஎல் அணியுடன் இந்திய அணி ஆடியிருந்தால் கூட கொஞ்சம் மேட்ச் பிராக்டீஸ் கிடைத்திருக்கும். ஆனால் திறமைகளை வளர்த்தெடுக்க முடியாவண்ணம் ஐசிசி வருவாய்ப் பகிர்வில் செல்வந்த கிரிக்கெட் வாரியங்கள் பெருவாரியை அள்ளிக் கொண்டு போவதில் மே.இ.தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஏன் பாகிஸ்தான் கூட பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் உண்டு என்பதை அறிந்தே விராட் கோலி, தனக்கு அணித்தேர்வு ஆரோக்கியத் தலைவலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருப்பது ஆச்சரியம்தான்!

நேற்று தொடரை வென்றவுடன் விராட் கோலி கூறியதாவது:

எங்களுக்குத் தேவையான வெற்றி முனைப்பு, உத்வேகம் கிடைத்துள்ளது. சமச்சீரான ஒரு ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. எனக்கு இப்போதுள்ள தலைவலி யாரைத் தேர்வு செய்வது, யாரை விடுவது என்பதே. இது ஆரோக்கிய அறிகுறி.

பெஞ்சிலிருந்து வரும் வீர்ர்கள் கூட பளிச்சிடுகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் மகாக் காலக்கட்டமாகும் இது.

இங்கிலாந்து என்று பார்த்தால், நாங்கள் பெரிதாக எதிரணியினர் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் எங்கள் மீது கடுமையாகப் பாய்ந்து ஆடினால், நம்மிடமும் பேட்டிங் பவரைக் காட்ட வீரர்கள் உள்ளனர். கூடுதலாக நம்மிடம் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர்.

இங்கிலாந்துடன் நிச்சயம் கடும் சவால் நிறைந்த தொடராகவே இருக்கும்.

ஒரு ரிலாக்ஸான சூழலை உருவாக்குவது ஒன்றும் கடினமல்ல. சிஸ்டம் உள்ளது. எது தரம் என்ற அளவுகோல் அமைக்கப்பட்டு விட்டது. ஆகவே வீரர்கள் தங்களை நம்பி களமிறங்க வேண்டியதுதான். வீரர்களும் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ஒரு கேப்டனாக நீ இதைச் செய், அதைச்செய் என்று நான் யாரையும் இடிக்க வேண்டியதில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x