Published : 21 Oct 2024 08:48 PM
Last Updated : 21 Oct 2024 08:48 PM

“வினேஷ் போகத், புனியாவின் செயலே போராட்டத்தை பாதித்தது” - சாக்‌ஷி மாலிக்

சாக்‌ஷி மாலிக்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஆசிய போட்டிக்கான தகுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத், பஜ்ரங் புனியா விலக்கு பெற்றது தங்களது போராட்டத்தை பாதிக்க செய்தது என முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘விட்னஸ்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ஒருவருடன் இணைந்து சாக்‌ஷி மாலிக் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். “சுயநலமாக யோசித்த காரணத்தால் எங்களது போராட்டம் பாதிக்கப்பட்டது. பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத்துக்கு நெருக்கமாக இருந்தவர்களின் பேராசை இதற்கு காரணம். ஆசிய போட்டிக்கான தகுதி சுற்றில் இருந்து அவர்கள் இருவரும் விலக்கு பெற்ற முடிவினால் போராட்டத்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. அது எங்கள் போராட்டத்தின் நோக்கத்தை மாற்று கண்ணோட்டத்தில் பலரையும் தள்ளியது. எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தந்தவர்களையே நாங்கள் சுயநலத்துக்காக போராடுகிறோமோ என எண்ண செய்தது” என சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

இதே புத்தகத்தில் பால்ய காலத்தில் தான் எதிர்கொண்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ஆகியோரை மீதும் சாக்‌ஷி குற்றம் சுமத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள அவர் கடந்த ஆண்டு மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை கோரியும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் அடங்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குழு தலைநகர் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது. நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரில் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த சூழலில் அண்மையில் முடிந்த ஹரியானா மாநில தேர்தலுக்கு முன்னதாக வினேஷ் மற்றும் பஜ்ரங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில் தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத், சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x