Published : 15 Jun 2018 08:57 AM
Last Updated : 15 Jun 2018 08:57 AM
உலகக்கோப்பைக் கால்பந்து மாஸ்கோவில் நேற்று ரஷ்யாவின் 5-0 கோல் வெற்றியுடன் அபாரமாகத் தொடங்கியது. சவுதி அரேபியா அணியை நொறுக்கி குரூப் ஏ-வில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ரஷ்யா.
ரஷ்யாவிலேயே பலரும் இந்தப் போட்டி பெரிய தர்மசங்கடமாகப் போயிருக்கும் என்றே நினைத்தனர் ஆனால் ஸ்டானிஸ்லாவ் செர்சிசோவ் அணிக்கு நேற்று ஒரு அருமையான இரவாக அமைந்தது.
ரஷ்ய அணிக்காக காஸின்ஸ்கி 12வது நிமிடத்திலும் பதிலி வீரர் செரிஷேவ் 43 மற்றும் 90வது நிமிடங்களில் இரண்டு ஸ்டன்னிங் கோல்களையும் அடிக்க 71வது நிமிடத்தில் ஸையுபா ஒரு கோலையும் கடைசியில் விசில் ஊதுவதற்கு முன்னதாக கோலோவின் அழகாக ஒரு கோலையும் அடிக்க சவுதி மூழ்கியது.
ஹங்கேரியை 1986-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 6-0 என்று வென்ற பிறகு இதுதான் உலகக்கோப்பையில் ரஷ்யாவுக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. 2010-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பையில்தான் போட்டியை நடத்தும் நாடு குரூப் மட்டத்திலிருந்து நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போயுள்ளது, இம்முறை ரஷ்ய அணி தங்கள் மீதுள்ள சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்துள்ளது. இன்னும் இந்தப் பிரிவில் எகிப்து, உருகுவே ஆகிய அணிகளை வீழ்த்தி குரூப் ஏ-வில் முன்னிலை வகிக்கும் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது.
தொடக்கத்தில் சவுதி அரேபியா ரஷ்யப் பகுதிக்குள் இடதுபுறத்திலிருந்து நுழைந்து பெரிய தொல்லைகளைக் கொடுத்தது, ஆனால் 12வது நிமிடத்தில் சவுதி அரேபியா கோல் அருகே வந்த ரஷ்ய முன்கள வீரர் கோலை நோக்கி அடித்த ஷாட் சவுதி வீரர் காலில் பட்டு வெளியே செல்ல கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இடது புறத்திலிருந்து கோலோவின் உள்ளே வரும் அருமையான கிராஸ் அடிக்க இயூரி காஸின்ஸ்கி முதல் கோலை அடித்தார்.
22வது நிமிடத்தில் ஆலன் ஸாகோயேவ் என்ற ரஷ்ய வீரர் காயம் காரணமாக வெளியேறியது அந்த அணிக்கு ஒரு அடி என்று கூறப்படுகிறது, ஆனால் அவர் வெளியேற்றம் ரஷ்ய கோல் மழையைத் தடுக்கவில்லை.
இடைவேளைக்கு முன்னதாக டெனிஸ் செரிஷேவ் இன்னொரு கோலை அடிக்க 71வது நிமிடத்தில் ஆர்டெம் சையுபா ஒரு கோலையும் பிறகு மீண்டும் டெனிஸ் செரிஷேவ் 90வது நிமிடத்தில் ஒரு கோலையும் கடைசியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோலோவின் ஒரு கோலையும் அடிக்க 5-0 என்று சவுதி நொறுங்கியது.
டெனிஸ் செரிஷேவ் பெஞ்சிலிருந்து வந்து அபாரமாக ஆடி 2 கோல்களை அடித்தார். அதுவும் 90வது நிமிடத்தில் அடித்த கோல் அருமையாகத் தூக்கி விடப்பட்ட ஒரு வளைந்த ஷாட் ஆகும். இடது கால்வண்ணத்தில் வந்த இந்த கோல் நிச்சயம் மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டப்படும். ஸகோயேவ் என்ற திறமையான நடுக்கள வீரர் காயமடைந்து வெளியேறியவுடன் இறக்கபப்ட்ட டெனிஸ் செரிஷேவ் ஆடிய ஆட்டத்தினால் கோலோவின் மையத்தில் இன்னும் தாக்குதல் ஆட்டத்தை ஆட முடிந்தது.
அதுவும் அவர் அடித்த ரஷ்யாவின் 2வது கோல் அபாரமானது. ரஷ்ய நடுக்கள வீரர் ரோமன் சோப்னினுக்கு பந்தை எடுத்துச் செல்லவாகான நிலையை கோலோவின் ஏற்படுத்திக் கொடுக்க ஸோப்னின் செரிஷேவுக்கு ஒரு ஸ்கொயர் பாஸ் செய்தார் .இதனையடுத்து சவுதி அரேபியா தடுப்பாட்ட வீரர்கள் ஒசாமா ஹவ்சாவி மற்றும் மொகமத் அல் புராய்க் ஆகியோர் அரக்கப் பரக்க தங்கள் இடத்தை விட்டு நகர்ந்து ரஷ்ய வீரர்களை நோக்கி வந்து செரிஷேவைத் தடுக்கப் பார்த்தனர் அப்போது கோல் அடிப்பது போல் பாசாங்கு காட்டி தடுக்க வந்தவர்களைக் குழப்பி விட்டு பிறகு பந்தை இடது காலால் கோலுக்குள் திணித்தது, காயமடைந்த வீரருக்குப் பதிலாக செரிஷேவ் களம் புகுந்தது மறைமுக ஆசிர்வாதமே என்பதை உணர்த்தியது.
71வது நிமிடத்தில் ஆர்டெம் ஸையுபாவை சவுதி வீரர்கள் மார்க் செய்யவில்லை விளைவு தனக்கு வந்த கிராஸை அருமையாக முட்டி கோலுக்குள் செலுத்தினார், சவுதி அரேபியாவுக்கு அனைத்தும் முடிந்தது, ஆனால் ரஷ்யாவுக்கு முடியவில்லை, மீண்டும் செரிஷேவ் வெகுவேகமாக உள்ளே வந்து நிபுணர் போன்று பந்தை கோலுக்குள் செலுத்தினார், 4-0 பிறகு கோலோவின் காய நேரத்தில் ஒரு வளைந்த ஃப்ரீகிக்கை கோலுக்குள் செலுத்த 5-0 என்று சவுதியை நொறுக்கியது.
சவுதி அரேபியா ஒரு விட்டுக்கொடுக்கும் எதிரணி என்று அவர்கள் ஆட்டத்தில் தெரிந்தது. இல்லையெனில் 61% பந்தைத் தங்கள் பிடியில் வைத்திருந்த ஒரு அணி 5 கோல்களை வாங்கியிருக்காது. காரணம் பாஸ் செய்வதில் எந்த ஒரு குறிக்கோளும் முனைப்பும் இல்லை.
யாசர் அல் ஷாரனி இடது புறத்தில் கொஞ்சம் வேகம் காட்டினார். ஆனால் கோலை நோக்கி ஒரு ஷாட் கூட சவுதி அடிக்கவில்லை. ஆரம்பத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பையும் கோட்டை விட்டனர், அணியில் அனைவரும் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் உயர்மட்ட கால்பந்து ஆட்டத்திற்கான அவர்களது தயாரிப்பு போதாமையாக இருந்தது.
அடுத்த செவ்வாயன்று எகிப்துடன் ரஷ்யா மோதுகிறது. சவுதிக்கு மேலும் கஷ்டம்தான் உருகுவேயை அடுத்தப் போட்டியில் சந்திக்கிறது.
ஆட்டத்தைப் பற்றி சவுதி பயிற்சியாளர் யுவான் ஆண்டனியோ பிஸ்ஸி கூறுவது சவுதி ஆட்டத்தின் ஒரு ரத்தினச் சுருக்க வர்ணனையாகும்: “பெரிய அளவில் ரஷ்யா வென்றுள்ளது ஆனால் அதற்காக அவர்கள் பாடுபடவில்லை. எங்களது மோசமான ஆட்டம் முடிவில் பிரதிபலித்துள்ளது” என்றார். அதாவது ரஷ்யா அபாரமாக ஆடிவிடவில்லை, எங்கள் மோசமான ஆட்டம் அந்த அணியின் ஆட்டத்தை உயர்த்திக் காட்டியுள்ளது என்ற தொனியில் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவதற்கான தகுதி உடையவர்தான் ஏனெனில் ஸ்பெயின் அணிக்காக 4 ஆண்டுகள் தொழில்பூர்வ கால்பந்தாட்டத்தை ஆடியவர் பிஸ்ஸி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT