Published : 19 Oct 2024 01:16 PM
Last Updated : 19 Oct 2024 01:16 PM

நாடு திரும்ப முடியாத ஷாகிப் அல் ஹசன்: முடிகிறது கிரிக்கெட் வாழ்க்கை!

ஷாகிப் அல் ஹசன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் சொந்த மண்ணில் ஆடி ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்த ஷாகிப் அல் ஹசன், நாட்டில் நிலவும் எதிர்ப்புக் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதையடுத்து ஷாகிப் அல் ஹசனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷாகிப் அல் ஹசனுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இடது கை ஸ்பின்னர் ஹசன் முராத் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் டாக்காவில் அக்டோபர் 21-ம் தேதி தொடங்குகிறது.

நியூயார்க்கில் இருந்து டாக்காவுக்குத் திரும்பும் வழியில் துபாயில் தங்குமாறு ஷாகிப் அல் ஹசன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக போராட்டங்கள் இருந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட்டில் அவாமி லீக் அரசு பதவி விலகியிதிலிருந்தே ஷாகிப் அல் ஹசன் நாடு திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார். அவாமி லீக் கட்சி எம்.பி. ஷாகிப் அல் ஹசன் என்பதால் இவருக்கும் எதிர்ப்பு கடுமையாக உள்ளது.

முதலில் கனடா குளோபல் டி20 ஆடினார், பிறகு வங்கதேசம் வரலாறு படைத்த 2-0 தொடர் வெற்றியில் பாகிஸ்தானில் இருந்தார். பிறகு சர்ரே அணிக்காக ஒரு போட்டியில் ஆட இங்கிலாந்து சென்றார். பிறகு இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். இப்போது பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக நாடு திரும்ப முடியாமல் கஷ்டப்படுகிறார்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலகத்தின் போது 147 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது அதில் ஷாகிப் அல் ஹசனும் ஒருவர். இந்நிலையில் முராத் அவருக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 23 வயதான முராத், 30 முதல் தரப் போட்டிகளில் ஆடி 136 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஏற்கெனவெ முராத் 2 டி20 சர்வதேச போட்டிகளில் கடந்த ஏஷியன் கேம்ஸில் ஆடியுள்ளார்.

எனவே ஷாகிப் அல் ஹசனின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வருகிறது என்றே தெரிகிறது. இதுவரை ஷாகிப் அல் ஹசன் 71 டெஸ்ட் போட்டிகளில் 4,609 ரன்களை 37.77 என்ற சராசரியில் 61.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார், அதிக ஸ்கோர் 217. 5 சதங்கள் 31 அரைசதங்கள். 246 டெஸ்ட் விக்கெட்டுகளை 19 முறை இன்னிங்ஸிற்கு 5 விக்கெட்டுகள் என்று எடுத்துள்ளார்.

247 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் 7,570 ரன்களை 9 சதங்கள் 56 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். 317 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

129 டி20 சர்வதேசப் போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2551 ரன்களை எடுத்துள்ளார். 149 டி20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். வங்கதேசத்தின் மிகப்பெரிய ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார். ஐசிசி ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் டாப் 5-ல் நீண்ட காலம் இடம்பெற்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x