Published : 18 Oct 2024 08:16 PM
Last Updated : 18 Oct 2024 08:16 PM

முதல் டெஸ்ட் 3-வது நாள்: கோலி, சர்ஃபராஸ் அசத்தல் - இந்தியா 231 ரன்கள் சேர்ப்பு!

படம்: முரளிகுமார்

பெங்களூரு: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 231 ரன்களைச் சேர்த்துள்ளது. விராட் கோலி - சர்ஃபராஸ் கான் இணைந்து அணியின் ஸ்கோரை ஏற்றினர்.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இரண்டாம் நாளன்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூஸிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் அந்த அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்ஸில் நிகழ்ந்த சோதனையை, இரண்டாவது இன்னிங்ஸில் சாதனையாக மாற்றும் முயற்சியில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்களுக்கு அவுட்டானார். இருந்தாலும் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். 52 ரன்களில் அவரும் பெவிலியன் திரும்பினார். ‘ஒரு தடவ தான் தவறும்’ என்ற வசனத்துக்கு ஏற்ப விராட் கோலி - சர்ஃபராஸ் கான் இணைந்து சம்பவம் செய்தனர்.

கோலி ஒரு சிக்சர் விளாச, சர்ஃபராஸ் கான் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். விராட் கோலி 70 ரன்களில் அவுட்டானார். சொல்லிவைத்தார் போல சர்ஃபராஸ் கானும் 70 ரன்களில் இருக்க, 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 231 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் இந்தியா 125 ரன்கள் பின்தங்கியுள்ளது. நியூஸிலாந்து அணி தரப்பில் அஜஸ் படேல் 2 விக்கெட்டையும், க்ளென் பிலிப்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x