Published : 17 Oct 2024 12:26 PM
Last Updated : 17 Oct 2024 12:26 PM

IND vs NZ முதல் டெஸ்ட் | டக் அவுட்டான கோலி, சர்பராஸ், ராகுல், ஜடேஜா

கோப்புப்படம்

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி, சர்பராஸ் கான், கே.எல்.ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறி உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பெங்களுருவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்கள், விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் டக் அவுட்டாகி வெளியேறினர்.

கடந்த 2021-ல் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆனார். அதன் பிறகு தற்போதுதான் ரன் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்துள்ளார். 9.4 ஓவர்களில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

மழை காரணமாக முதல் செஷன் சில நிமிடங்கள் தடைப்பட்டது. ஜெயஸ்வால், 63 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகினர். பந்த் 20 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் மற்றும் பந்த் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5, வில்லியம் ஓ’ரூர்கி 4 மற்றும் டிம் சவுதி 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியில் 5+ வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது ஆறாவது முறை. இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா எடுத்துள்ள மூன்றாவது குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் அதீத நம்பிக்கை தான் சவாலான பெங்களூரு ஆடுகளத்தில் விக்கெட்டுகளை இழக்க காரணம் என ரசிகர்கள் சாடி வருகின்றனர். அண்மையில் ‘ஒரே நாளில் 400 ரன்களும் அடிப்போம்... 2 நாட்கள் விளையாடி டிராவும் செய்வோம்’ என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x