Published : 14 Oct 2024 09:53 AM
Last Updated : 14 Oct 2024 09:53 AM

கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரத்தால் சாதித்தோம்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்

ஹைதராபாத்: வங்கதேச அணிக்கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரத்தால் சாதித்தோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வங்கதேச அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111, அபிஷேக் சர்மா 4, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75, ரியான் பராக் 13 பந்துகளில் 34, ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதையடுத்து இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும், தொடர்நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வாயினர்.

தொடர்நாயகன் விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: இந்த டி20 தொடரில் கேப்டனும் பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அந்த உற்சாகம் அனைத்து வீரர்களிடமும் எதிரொலித்தது. எனவே, இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி சாதனை வெற்றியைப் பெற்றோம்.

அனைவருடைய வெற்றியையும் அனைவரும் கொண்டாடும் போது, இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: இந்தத் தொடரில் நாங்கள் ஓர் அணியாக நிறைய சாதித்திருக்கிறோம். முக்கியமாக தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டபோது என் அணியில் தன்னலமற்ற வீரர்கள் வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஹர்திக் பாண்டியா சொல்வது போல் தன்னலமற்ற, பரஸ்பரம் ஒருவர் ஆட்டத்தை, மற்றவர்கள் மகிழ்வுடன் வரவேற்கும் மன நிலையே தேவை என்று நான் கூறி வந்தேன். களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இதே பரஸ்பர உறவுகள், சகோதரத்துவம் தொடர்வதையும் விரும்புகிறேன். இப்படிப்பட்ட மன நிலை வந்து விட்டால் மைதானத்தில் கேளிக்கை தவிர வேறெதுவும் இருக்காது.

ஒரு பேட்ஸ்மேன் 99 ரன்களில் இருந்தாலும், 49 ரன்களில் இருந்தாலும் அடிக்க வேண்டிய பந்தை அடித்து, மைதானத்துக்கு வெளியே அடிக்க வேண்டிய பந்தாக இருந்தால் மைதானத்துக்கு வெளியே அனுப்ப வேண்டியது தான் சரி. சஞ்சு சாம்சன் அதைத்தான் செய்தார். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x