Published : 11 Oct 2024 06:29 AM
Last Updated : 11 Oct 2024 06:29 AM
ஹைதராபாத்: இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் தொடங் கியது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8, ஹர்திக் பாண்டியா 32, ரியான் பராக் 15, அர்ஷ்தீப் சிங் 6 ரன்கள் எடுத்தனர். நித்தீஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்தார். அவருக்கு இணையாக விளையாடிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களை விளாசினார்.
பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் மஹ்மத்துல்லா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் நித்திஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியிலும் வென்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக டி20 தொடரை கைப்பற்றுவதில் இந்திய அணி முனைப்புடன் செயல்படக் கூடும். அதே நேரத்தில் வங்க தேச அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறு வதற்கு அதிக கவனத்துடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment