Published : 09 Oct 2024 09:05 AM
Last Updated : 09 Oct 2024 09:05 AM
அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்த தொடரில் முதல் முறையாக பதக்கம் வெல்வதை இந்திய மகளிர் அணி உறுதி செய்துள்ளது.
தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் 92-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஷின் யூபனை 11-9, 7-11, 12-10, 7-11, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் மணிகா பத்ராவும் வெற்றியை வசப்படுத்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
ஆனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் தென் கொரியா வெற்றி பெற்று ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தது. கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் அய்ஹிகா முகர்ஜி 7-11, 11-6, 12-10, 12-10 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள ஜியோன் ஜிஹீயை வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணி அரை இறுதியில் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT