Published : 07 Oct 2024 12:42 AM
Last Updated : 07 Oct 2024 12:42 AM
குவாலியர்: இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பியதை மறுபிறப்பு போல உணர்கிறேன் என சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பினார் தமிழகத்தைச் சேர்ந்த வருண். குவாலியரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
போட்டிக்கு பிறகு அவர், “மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணிக்குள் திரும்புவது உணர்வுபூர்வமானது. மீண்டும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவதில் மகிழ்ச்சி. இதை மறுபிறப்பு போல உணர்கிறேன். வழக்கமாக நான் கடைபிடிக்கும் அதே செயல்முறையை பின்பற்றுகிறேன்.
அடுத்து என்ன என்பது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு நான் சில தொடர்களில் விளையாடி இருந்தேன். அதில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரும் அடங்கும். அது தரமான தொடர். அந்த தொடரில் அஸ்வின் உடன் இணைந்து பயணித்தது எனக்கு பலன் தந்தது. அதில் நாங்கள் பட்டமும் வென்றோம். இந்த தொடருக்கு நான் சிறந்த முறையில் தயாராக எனக்கு அது கைகொடுத்தது.
இந்திய அணியில் வாய்ப்பு பெற உயர்ந்த செயல்திறன் அவசியம். அதுதான் வாய்ப்புக்கான கதவை தட்டும் வழியும் கூட. தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT