Published : 05 Oct 2024 10:21 PM
Last Updated : 05 Oct 2024 10:21 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அஸம் விலகியதையடுத்து அடுத்த கேப்டனாக தேர்வு செய்வதற்கு அனைவரையும் முயற்சி செய்து விட்ட நிலையில் முகமது ரிஸ்வான் மட்டுமே மீதமுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் தொடக்க வீரர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆனால், முகமது ரிஸ்வான் மீது வீரர்களுக்கோ, அணி நிர்வாகத்திற்கோ அவ்வளவு திருப்தியில்லை என்பதையும் முடாசர் நாசர் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. பாபர் அஸம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை உதறிய பிறகு அங்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அஸமுக்கு அடுத்தபடியாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி, 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததும் பேசுபொருளாக அங்கு திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உள்ள ஒரே வாய்ப்பு குறித்து முடாசர் நாசர் கூறியதாவது:
இப்போதைக்கு அவர்களுக்கு தெரிவு எதுவும் இல்லை. ரிஸ்வானைத் தவிர அனைவரையும் முயற்சி செய்தாகிவிட்டது. ரிஸ்வானைத்தான் அவர்கள் கேப்டனாக்க முடியும். ஆனால், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும் சரி, மேல் மட்ட நிர்வாகத்தினருக்கும் சரி ரிஸ்வான் மீது திருப்தி இல்லை என்பதே நிலை. ஆனாலும் இவரை விட்டால் ஆளில்லை. இவரைத் தேர்வு செய்யவே தேர்வுக்குழுவினர் கட்டாயப்படுத்தப்படுவர்.
இல்லையெனில் இன்னொரு இளம் வீரரைத் தேர்வு செய்தால் பாபர் அஸமுக்கு நடந்ததுதான் நடக்கும். எனவே மூத்த வீரர் ஒருவரை கேப்டனாக்கி அவர் தலைமையில் இளம் வீரர் ஒருவரை கேப்டன்சிக்குத் தயார்ப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை 3 வடிவங்களுக்குமே ரிஸ்வானைக் கேப்டனாக்கினால் நல்லது என்றுதான் கருதுகிறேன்.
கேப்டன்சியில் அவசரகதி மாற்றங்கள் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய தோல்விகளில் பிரதிபலித்தது. இளம் வீரர்கள் கேப்டனாக்கப்பட்டு பிறகு நீக்கப்படுகின்றனர். இதனால் அணியில் கோஷ்டிகள் உருவாகின்றன. இது பாகிஸ்தான் அணியின் பிரச்சினை மட்டுமல்ல என கூறினார் முடாசர் நாசர்.
சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுவதால் அதற்குள் ஒரு நல்ல ஆக்ரோஷமான, உத்வேகமான கேப்டனை அவர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதோடு அவர் தலைமையில் ஒருங்கிணைந்த மனமொத்த ஒரு பாகிஸ்தான் அணியை உருவாக்க வேண்டிய சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT