Published : 08 Jun 2018 08:04 PM
Last Updated : 08 Jun 2018 08:04 PM
இந்திய, அயல்நாட்டு வீரர்களில் பலர் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று ரன்களையும், விக்கெட்டுகளையும் பணங்களையும் குவித்துள்ள நிலையில் 3 இந்திய வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடினர். அவர்கள்: இஷாந்த் ஷர்மா, வருன் ஆரோன் மற்றும் செடேஸ்வர் புஜாரா ஆகியோர்களாவர்.
இதில் மிகவும் விநோதமாக ஒருநாள் கவுண்ட்டி கிரிக்கெட்டில் புஜாரா நன்றாக ஆடியுள்ளார், ஆனால் சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் சறுக்கியுள்ளார்.
யார்க்ஷயர் அணிக்காக ஆடிவரும் புஜாரா சிகப்புப் பந்து முதல்தர கிரிக்கெட்டில் 8 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவரது சராசரி 12.50. அரைசதம் அடிக்கவில்லை. ஸ்ட்ரைக்ரேட் 40.8.
அதிசயமாக ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் 7 இன்னிங்ஸ்களில் 370 ரன்களை 62 என்ற சராசரியில் 3 அரைசதங்கள், 1 சதம் ஆகியவற்றுடன் எடுத்து அசத்தியுள்ளார்.
சிகப்புப் பந்து முதல் தர கிரிக்கெட்டில் புஜாராவை ஒப்பிடும்போது சசெக்ஸ் அணிக்கு ஆடும் நம் பவுலர் இஷாந்த் சர்மா பேட்டிங்கில் புஜாராவைக் கடந்துள்ளார். 6 இன்னிங்ஸ்களில் 102 ரன்களை எடுத்துள்ள இஷாந்த் சர்மா 25.5 என்று புஜாராவைக் காட்டிலும் இருமடங்கு சராசரி வைத்துள்ளார். மேலும் சிகப்புப் பந்து முதல் தர கிரிக்கெட்டில் ஓர் அரைசதமும் எடுத்துள்ளார் இஷாந்த் சர்மா. தன் வாழ்நாளின் சிறந்த ரன் எண்ணிக்கையான 66 ரன்களை லீஷயர் அணிக்கு எதிராக இஷாந்த் சர்மா எடுத்துள்ளதோடு விக்கெட் கீப்பர் மைக்கேல் பக்ரஸுடன் இணைந்து 153 ரன்கள் கூட்டணியும் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அருமையான கவர் டிரைவ்கள், பிளிக்குகள், மேலேறி வந்து தூக்கி அடித்தல் என்று அசத்தியுள்ளார் இஷாந்த் சர்மா.
இங்கிலாந்து கவுண்ட்டி ஆடினால் இங்கிலாந்துக்கு எதிராக அங்கு இந்திய அணி ஆடும்போது வீரர்களுக்கு அங்குள்ள சூழ்நிலைமைகள் பழக்கமாகும் என்று கூறிவரும் நிலையில் இஷாந்த் சர்மா சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் புஜாராவைக் காட்டிலும் அதிகரன்களை எடுத்துள்ளது இந்திய அணித்தேர்வுக்குழுவினருக்கு புதிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது என்று கருத இடமுண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT