Published : 16 Jun 2018 11:05 AM
Last Updated : 16 Jun 2018 11:05 AM

செல்ஃப் கோல் அடித்துவிட்டு மொராக்கோ வீரர் அழுகை: உலகக்கோப்பையையே வென்றது போல் கொண்டாடிய ஈரான்

உலகக்கோப்பைக் கால்பந்தாட்டத்தில் நேற்று மற்றொரு பிரிவு பி ஆட்டத்தில் மொராக்கோ அணியை ஈரான் 1-0 என்று வீழ்த்தியது, கோலை ஈரான் அடிக்கவில்லை, தங்கள் கோலில் தாங்களே மொராக்கோ அடித்துக் கொள்ள ஈரான் வெற்றி பெற்றது. ஆனால் உலகக்கோப்பையயே வென்றது போல் ஈரான் கொண்டாடியதுதான் பலருக்கும் ஆச்சரியம்.

அதுவும் ஆட்டம் முடிய இருந்த நேரத்தில் காயங்களினால் இழந்த நேரத்துக்கான இழப்பீட்டு நேரத்தில் மொராக்கோவின் அஜீஜ் பூஹாட்டூஸின் சொந்த கோலினால் ஈரான் வென்றது.

உலகக்கோப்பையில் மட்டும் எந்த ஒரு மோசமான ஆட்டமாக இருந்தாலும் இறுதி வரை பார்க்கப்பட வேண்டும், ஏனெனில் கடைசியில் ஏதாவது நடக்கும், சுவாரசியமாக நடக்கும். ஆட்டத்தில் உணர்ச்சி மோதல்கள் இருந்தன, பார்க்க ஆட்டம் அவ்வளவு சுவாதீனமாக இல்லை, ஆனாலும் ஈரான் பயிற்சியாளர் கார்லோஸ் குயிரோஸ், ‘அழகான ஆட்டம்’ என்கிறார்.

ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் ஈரானுக்கு மகிழ்ச்சித் துள்ளல், மொராக்கோவுக்கு துயரத் துவளல் கணம்.  எசான் ஹஜ்சாஃபி இடது புறத்திலிருந்து ஃப்ரீ கிக் அடித்தார். அப்போது இடைவேளைக்குப் பிறகு இறக்கப்பட்ட மொராக்கோ பதிலி வீரரனா அஜீஜ் பூஹாடூஸ் தலையால் முட்டி தங்கள் கோலுக்குள்ளேயே அடித்து விட்டார். அதன் பிறகு அவர் கண்ணீர் விட்டு என்ன பயன், 95 நிமிட தடுப்பு, ஆக்ரோஷம் எல்லாம் கடைசியில் பூஹாதூஸின் ‘தல’யில் வந்து விடிந்தது. முதலில் ஃப்ரீ கிக் கிடைக்கவும் மொராக்கோதான் காரணம், அது தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்கப்படவும் மொராக்கோவின் ஆட்டம்தான் காரணம் என்று அதன் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் வருந்தினார்.

தொடக்கத்தில் மொராக்கோ கற்பனை வளத்துடன் ஆடியது, திறமையும் தீவிரமும் கூட நிறைய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டன. ஆனால் கோல்கள் மட்டும் விழவில்லை. ஆனால் மொராக்கோவின் முயற்சிகளை ஈரான் வெற்றிகரமாகத் தடுத்ததில் மொராக்கோவின் திறமை கோலாக முடியாமல் நின்றது. சில வேளைகளில் ஓவர் கற்பனைத்திறன் அதீதமாக சில முடிவுகளை எடுக்க வைக்கும் அப்படிப்பட்ட சந்தர்ப்பம்தான் மொராக்கோவின் ஹகீம் ஸியேச் ஒரு சாதாரண பாஸை அஷ்ரப் ஹச்சீனிக்கு அடித்தார், ஆனால் அவர் பந்தை வெளியே போக அனுமதித்து த்ரோ வாய்ப்பாக மாற்றினார், இது ஏன்? மேலும் ஹகிம் ஸியாச், அயூப் எல் காபி, மெதி பெனாட்டியா ஆகியோர் சரியாக ஆடினாலும் கோலாக மாற்றவில்லை.

ஈரானும் இதற்குச் சளைத்ததல்ல, அதன் சிறந்த வீரர் அலிரீசா ஜஹன்பக்‌ஷ் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை.

ஈரான் அணிக்கு இந்தப் போட்டிக்கு முன்பாக புற அழுத்தங்கள் இருந்தன, நைக் நிறுவனம் ஈரான் வீரர்களுக்கு பூட்ஸ் சப்ளையை நிறுத்தியது.

ஈரான் அணியினர் மொராக்கோவின் முதல் அரைமணி நேர ஆக்ரோஷத்தை வெற்றிகரமாகத் தடுத்தாட்கொண்டனர், ஆனால் இதில் தங்கள் வேகத்தையும் இழந்தனர். இடைவேளைக்கு முன் ஈரானிய மெஸ்ஸி என்று அழைக்கப்படும் சர்தார் அஸ்மூன் ஆக்ரோஷம் காட்டினார், ஆனால் அதனால் பயன் ஒன்றுமில்லை.

இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே முதல் பாதி வெறுப்பில் ஆடியதால் சுவாரசியமற்றுச் சென்றது. பாதுகாப்பு உத்திகள்தான் பிரதானமாக இருந்தது. அவ்வப்போது கோல் வாய்ப்புகளும் கிடைத்தன, அது ஒன்று தடுக்கப்பட்டது, அல்லது வெளியே அடிக்கப்பட்டது என்பதாகவே இருந்தது.

இந்நிலையில்தான் கடைசியில் ஈரான் ஒரு அபாரமான இடது புற மூவ் ஒன்றில் ப்ரீ கிக் பெற, ப்ரீ கிக் ஷாட் மொராக்கோ கோல்பகுதிக்குள்ளே வேகமாக வர மண்டையை நீட்டி அதனை கோலுக்குள் தள்ளினார் மொராக்கோ வீரர் பூஹாதூஸ். கோல் கீப்பர் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவரும் கூட ஒருவேளை நம்மாள்தானே அடிக்கிறார், போகட்டும் ஒரு கோல்தானே என்று விட்டுவிட்டாரோ? ஆனால் பூஹாதூஸ் ஏன் அப்படிச் செய்தார்? அவர் ஆட்டத்தில் தர்க்கமே இல்லை மண்டையால் முட்டி வெளியே அடித்திருந்தாலும் கார்னர் வாய்ப்பு ஈரானுக்கே கிடைக்கும், பேசாமல் விட்டிருந்தால் கோல் கீப்ப்ரே கூட தடுத்திருப்பார் அல்லது பந்தை வெளியே விரட்டியிருப்பார், தேவையில்லாமல் அதுபாட்டுக்குச் சென்ற பந்தை மண்டையை நீட்டி அதுவும் துல்லியமாக தன் கோலுக்குள்ளேயே அடிக்க உண்மையில் ஒரு துணிவு வேண்டும்!! அதன் பிறகு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அழுது என்ன பயன்? தேவையில்லாமல் தலையீடு என்பார்களே அதுதான் இது. பந்தின் திசையில் தேவையில்லாமல் தலையிட்டு தன் கோலிலேயே அடித்து விட்டு அழுதால் சரியாகிவிடுமா?

அதற்காக ஈரான் ஏதோ உலகக்கோப்பையையே வென்றது போல் எதிரணியினர் போட்டுக் கொடுத்த கோலுக்கு அப்படி குடிப்பானேன்?

ஆனால் உலகக்கோப்பைக் கால்பந்தின் சாராம்சமே அதன் பன்முகத்தன்மைதான், உயர்மட்ட விறுவிறு, தரமான கால்பந்தும் கிடைக்கும் இம்மாதிரி விறுவிறு கால்பந்தும் அதன் எதிர்பாரா கேலிக்கூத்து முடிவுகளும்தான் உலகக்கோப்பைக் கால்பந்துக்கு வண்ணம் சேர்ப்பவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x