Published : 25 Jun 2018 06:42 PM
Last Updated : 25 Jun 2018 06:42 PM
ஆஸ்திரேலியாவுகு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 114/8 என்ற நிலையில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புகளெல்லாம் வற்றிப் போன நிலையில், 122 பந்துகளில் 110 ரன்கள் என்று அரிய சதமொன்றை அடித்து இங்கிலாந்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றதோடு ஆஸி.க்கு 5-0 ஒயிட் வாஷும் கொடுத்தது இங்கிலாந்து.
இந்நிலையில் வெள்ளைப்பந்தில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் இப்போது ஜோஸ் பட்லர்தான் என்று பெருமைப் படுத்தப்பட்டுள்ளார், ஆனால் ஜோஸ் பட்லரோ பினிஷிங்கை தோனியிடம் கற்றேன் என்று கூறியுள்ளார்.
தோனி பல போட்டிகளில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார் நேற்று ஜோஸ் பட்லரும் அடில் ரஷீத், ஜேக் பால் ஆகியோரை வைத்துக்கொண்டு சாத்தியமில்லாத நிலையிலிருந்து வெற்றியைச் சாதித்துள்ளார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து ஜோஸ் பட்லர் கூறியபோது, “நாம் களத்தில் இருக்கும் போது நிலைமைகளுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் அழுத்தத்தை துடைத்தெறிந்து, அந்த இடத்தில், அந்த நேரத்தில், சூழ்நிலையில் தோனி களத்தில் இருந்திருந்தால் எப்படி ஆடியிருப்பார், என்ன செய்திருப்பார் என்று கற்பனை செய்தேன். அவர் எந்த வித மனத்தடையும் சிக்கலும் இல்லாமல் அமைதியாக ஆடியிருப்பார், நானும் அதைத்தான் செய்தேன்.
என்னுடைய சிறந்த ஆட்டங்களில் இது முதலிடத்தில் இருக்கும், நான் அமைதியாக ஆடினேன், தோனி என்ன செய்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்த்தேன்” என்றார் ஜோஸ் பட்லர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தான் வென்றெடுத்த பார்மின் தொடர்ச்சியாக பட்லருக்கு இங்கிலாந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் புது வாழ்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT