Published : 14 Jun 2018 11:19 AM
Last Updated : 14 Jun 2018 11:19 AM

முதல் ஒருநாள் போட்டி: ஸ்காட்லாந்திடம் தோற்ற இங்கிலாந்திடம் தோல்விகண்டது ஆஸ்திரேலியா

ஸ்காட்லாந்திடம் தோற்ற இங்கிலாந்திடம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி தழுவியது. ஓவலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 214 ரன்களுக்குச் சுருண்ட ஆஸ்ட்ரேலியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியடு இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி இலக்கைத் துரத்திய போது இரண்டு மினி சரிவுகளைக் கண்டது, அதனால் முதலில் 3/38 என்றும் பிறகு 163/6 என்றும் ஆனது, முதல் சரிவுக்குப் பிறகு இயன் மோர்கன் (69), ஜோ ரூட் (50) ஆகியோர் 115 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 2வது சரிவிற்குப் பிறகு மொயின் அலி (17), டேவிட் வில்லே (37 இணைந்து 34 ரன்களைச் சேர்த்தனர், கடைசியில் பிளெங்கெட் (3), வில்லே வெற்றியை ஈட்டித் தந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது.

டிம் பெய்ன் கேப்டன்சியில் உத்வேகம் இல்லை, 38/3 என்ற போதும், 163/6 என்ற போதும் இங்கிலாந்தை அவர் போதிய அளவு நெருக்கவில்லை. அதுவும் டேவிட் வில்லே பவுண்டரிகளுக்கு இடையிடையே தடுமாறிய போது அவரை வீழ்த்த முயற்சி எடுக்கவில்லை, ஸ்லிப்பை நிறுத்தி பீல்டர்களை அருகில் கொண்டு வந்திருந்தால் வித்தியாசமாக ஆட முனைந்து அவர் ஆட்டமிழந்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் டிம் பெய்ன் விட்டுவிட்டார்.

முன்னதாக இங்கிலாந்தின் ஸ்பின் இரட்டையர் மொயின் அலி, அடில் ரஷீத் தங்களிடையே 5 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். டேவிட் வில்லேயின் அருமையான பந்தில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் வெளியேறினார். மொயின் அலி (3/43) பவர் பிளேயில் பின்னால் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் ஆரோன் பிஞ்ச் (19) விக்கெட்டை முதல் ஓவரில் வீழ்த்தி பிறகு ஷான் மார்ஷ் (24) விக்கெட்டையும் வீழ்த்த பிறகு ஆஸி.கேப்டன் டிம் பெய்னை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் 12 ரன்களுக்கு வீழ்த்தி 3 விக்கெட்டுகளை மொயின் அலி கைப்பற்ற, அடில் ரஷீத், மார்கஸ் ஸ்டாய்னிஸை (22) எட்ஜ் செய்ய வைத்து வீழ்த்தினார்.

கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய இன்னிங்ஸிற்கு புத்துயிர்ப்பு அளித்தார், அவர் 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். ஆஸ்டன் ஆகர் (40) உடன் கூட்டணி 84 ரன்கள் கூட்டணி அமைத்தார் மேக்ஸ்வெல். 62 ரன்களில் பிளெங்கெட் பந்தை புல் ஷாட் ஆடி மிட்விக்கெட்டில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஷீத் கான் மீண்டும் வந்து ஆஷ்டன் ஆகரை எல்.பி.யாக்கினார். இதனையடுத்து 47 ஓவர்களில் 214 ரன்களுக்குச் சுருண்டது. மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், பிளெங்கெட் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

215 ரன்கள் இலக்கு என்பது இன்று சப் ஸ்டாண்டர்டான ஒன்றுதான், ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் நல்ல உணர்வுடன் கச்சிதமாக ஆக்ரோஷமாக வீசினர். இதனால் ஸ்டான்லேக்கின் அபார இன்ஸ்விங்கருக்கு ஜேசன் ராய் பவுல்டு ஆனார். அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்களில் நெசர் பந்தில் எல்.பி.ஆனார்.

பேர்ஸ்டோ 9 பந்துகளில் 4 அதிரடி பவுண்டரிகளுடன் அபாரமாகத் தொடங்கி 28 ரன்களில் கேன் ரிச்சர்டஸன் பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து தேவையில்லாமல் வெளியேறினார்.

ரூட், மோர்கன் இணைந்தனர், இருவரும் பொறுமையுடன் ஆடினாலும் ரன் விகிதத்தையும் ஓரளவுக்கு தேவைக்கேற்ப கொண்டு சென்றனர். இருவரும் இணைந்து 115 ரன்களைச் சேர்த்தனர், அப்போது இருவருமே அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்தத்தருணத்தில்தான் ஆண்ட்ரூ டை பந்தில் மட்டையின் அடியில் பட்டு மோர்கன் 69 ரன்களில் வெளியேறினார். ஜோஸ் பட்லர் இறங்கி ஒரு பந்தை தூக்கி பவுண்டரிக்கு அடித்தார், பிறகு அவருக்கு டிம் பெய்ன் ஒரு கேட்சை விட்டார். துரதிர்ஷ்ட பவுலர் ஸ்டான்லேக். ஆனால் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஆண்ட்ரூ டை பந்தில் மீண்டுமொரு மிஸ்டைம் ஷாட்டை ஆடி வெளியேறினார். டை 42 ரன்களுக்கு 2 விக்கெட். பிறகு ஜோ ரூட் (50) ஸ்டான்லேக் பந்தை எட்ஜ் செய்த போது ஸ்டான்லேக் 2வது விக்கெட்டை (2/44) கைப்பற்றினார். ஸ்டான்லேக் மிக அருமையாக வீசினார். வெற்றிக்கு 52 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலான்ந்த் 163/6 என்று தடுமாறியது.

இதன் பிறகு டேவிட் வில்லே, மொயின் அலி ஸ்கோரை அருகில் கொண்டு செல்ல பிளெங்கெட், வில்லே வெற்றிபெற்றுத் தந்தனர். டேவிட் வில்லே, நெசர் பந்தை நேர் சிக்ஸ் அடித்து வெற்றி பெறச் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x