Published : 30 Sep 2024 07:11 AM
Last Updated : 30 Sep 2024 07:11 AM
காலே: நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி, பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பெய்ரிஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் 39.5 ஓவர்களில் 88 ரன்களுக்கு சுருண்டது.
இதைத் தொடர்ந்து ஃபாலோ-ஆன் பெற்ற நியூஸிலாந்து 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை டாம் பிளண்டெல் 47, கிளென் பிலிப்ஸ் 32 ரன்களுடன் தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயன்றனர். பிளண்டெல் 60 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய மிட்செல் சான்ட்னர் 67 ரன்கள் குவித்தார்.
81.4 ஓவர்களில் 360 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்களையும், தனஞ்செய டிசில்வா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக கமிந்து மெண்டிஸும், தொடர்நாயகனாக பிரபாத் ஜெயசூர்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT