Published : 27 Sep 2024 06:15 PM
Last Updated : 27 Sep 2024 06:15 PM

IND vs BAN | மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - வங்கதேச அணி 107/3

கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 107 ரன்களை சேர்த்தது. இடைவிடாது பெய்த மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 35 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதன் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணியின் ஓப்பனர்களாக ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் களமிறங்கினர்.

24 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் நிதானமாக விளையாடி வந்த ஜாகிர் ஹசனை ஆகாஷ் தீப் அவுட்டாக்கினார். அடுத்து ஷத்மான் இஸ்லாமை 24 ரன்களில் வெளியேற்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆகாஷ். அடுத்து களமிறங்கிய மொமினுல் ஹக் - நஜ்முல் ஹுசைன் இருவரும் இணைந்து பொறுமையாக விளையாடி வந்தனர். அஸ்வின் பந்தில் நஜ்முல் 31 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இந்த விக்கெட் மூலம் ஆசியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 420 விக்கெட்டுகளுடன் 2-ம் இடம் பிடித்தார் அஸ்வின். 612 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் 35 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது. அதன் படி வங்கதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களைச் சேர்த்தது. மொமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x